< Back
கிரிக்கெட்
இந்தூர் ஆடுகளத்தின் மீதான நடவடிக்கையை தளர்த்தியது ஐ.சி.சி.
கிரிக்கெட்

இந்தூர் ஆடுகளத்தின் மீதான நடவடிக்கையை தளர்த்தியது ஐ.சி.சி.

தினத்தந்தி
|
28 March 2023 4:02 AM IST

கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) மேல்முறையீட்டு கமிட்டி, போட்டிக்குரிய வீடியோ காட்சிகளை விரிவாக ஆராய்ந்தது.

துபாய்,

சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வசப்படுத்தியது. இதில் மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இந்த மாத தொடக்கத்தில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டி 3 நாட்களுக்குள் முடிவுக்கு வந்தது.

ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற அந்த டெஸ்டில் சரிந்த 31 விக்கெட்டுகளில் 26-ஐ சுழற்பந்து வீச்சாளர்கள் சாய்த்தனர். ஆடுகளம் பேட்டிங் மற்றும் பந்து வீச்சுக்கு சரிசமமாக போட்டி அளிக்கும் வகையில் இல்லை. முழுக்க முழக்க சுழலுக்கு உகந்ததாக காணப்பட்டது.

வேகப்பந்து வீச்சு துளியும் எடுபடவில்லை என்று கூறிய ஐ.சி.சி.யின் போட்டி நடுவர் கிறிஸ்பிராட் இந்த ஆடுகளத்தை மோசமானது என்று முத்திரை குத்தியதுடன் 3 தகுதி இழப்பு புள்ளியும் விதித்தார். ஒரு மைதானம் 5 ஆண்டுக்குள் தகுதி இழப்பு புள்ளியை 5-க்கும் மேல் பெற்றால் அந்த மைதானத்தில் ஓராண்டு சர்வதேச போட்டி நடத்த தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் அதிர்ச்சிக்குள்ளான இந்திய கிரிக்கெட் வாரியம் போட்டி நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்தது. இது குறித்து வாசிம் கான், ரோஜர் ஹார்பர் ஆகியோர் கொண்ட சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) மேல்முறையீட்டு கமிட்டி, போட்டிக்குரிய வீடியோ காட்சிகளை விரிவாக ஆராய்ந்தது.

இதன் முடிவில் இந்தூர் ஆடுகளத்தின் மீதான நடவடிக்கையை ஓரளவு தளர்த்தியது. ஆடுகளத்தன்மையை மோசமானது என்பதற்கு பதிலாக சராசரிக்கும் குறைவானது என்று மாற்றம் செய்து இருப்பதுடன், தகுதி இழப்பு புள்ளியை 3-ல் இருந்து ஒன்றாக இந்த கமிட்டி குறைத்துள்ளது.

இதே போல் இவ்விரு அணிகள் இடையே ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்து டிராவில் முடிந்த 4-வது டெஸ்ட் போட்டிக்குரிய ஆடுகளத்தை சராசரியானது என்று ஐ.சி.சி. மதிப்பீடு செய்துள்ளது.

மேலும் செய்திகள்