ஐசிசி சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் விருது 2023 : இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் தேர்வு
|இவர் இந்த விருதை தொடர்ந்து 2-வது ஆண்டாக பெறுகிறார்.
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி 2023-ம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் விருதுக்கு 4 வீரர்களின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்து இருந்தது.
அதில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் , ஜிம்பாப்வே அணியின் ஆல் ரவுண்டர் சிக்கந்தர் ராசா, நியூசிலாந்தை சேர்ந்த மார்க் சாப்மேன் மற்றும் உகாண்டா அணியை சேர்ந்த அல்பேஷ் ராம்ஜானி ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.
இந்நிலையில் ஐசிசி 2023-ம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து அறிவித்துள்ளது. அதன்படி 2023-ம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேனும், இந்திய நட்சத்திர வீரருமான சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த ஆண்டு 17 டி20 போட்டிகளில் விளையாடி 155 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 48 சராசரியுடன் 733 ரன்கள் குவித்துள்ளார். இவர் இந்த விருதை தொடர்ந்து 2-வது ஆண்டாக பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.