< Back
கிரிக்கெட்
வருங்காலங்களில் பெங்களூரு அணிக்கு அவர் தலைமை தாங்குவதை பார்க்க விரும்புகிறேன் - ஹர்பஜன்
கிரிக்கெட்

வருங்காலங்களில் பெங்களூரு அணிக்கு அவர் தலைமை தாங்குவதை பார்க்க விரும்புகிறேன் - ஹர்பஜன்

தினத்தந்தி
|
13 May 2024 9:54 PM GMT

சென்னைக்கு தோனி போல இப்போதும் பெங்களூரு அணியில் விராட் கோலிதான் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரராக திகழ்வதாக ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற போராடி வருகிறது. முதல் 8 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்ட அந்த அணி அடுத்த 5 போட்டிகளில் வரிசையாக வெற்றி பெற்று பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்கிறது. இந்த சூழ்நிலையில் பெங்களூரு அணி தங்களுடைய கடைசி போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது. அதில் பெரிய வெற்றியை பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலையில் உள்ளது.

இந்நிலையில் இம்முறையும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போனால் மீண்டும் விராட் கோலி போன்ற இந்திய வீரர் பெங்களூரு அணியின் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என்று ஹர்பஜன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். ஏனெனில் சென்னை அணிக்கு தோனி போல இப்போதும் பெங்களூரு அணியில் விராட் கோலிதான் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரராக திகழ்வதாக ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ஒருவேளை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போனால் அவர்கள் ஒரு இந்திய வீரரை கேப்டனாக நியமிக்க பார்க்க வேண்டும். அது போன்ற சூழ்நிலையில் ஏன் விராட் கோலியை மீண்டும் அவர்கள் கேப்டனாக கொண்டு வரக்கூடாது. தோனி சென்னை அணியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறார்.

அதேபோல விராட் கோலி பெரிய தலைவர். அவருக்கு பெங்களூரு அணி எந்த வகையான கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பது தெரியும். தற்போது அவர்கள் ஆக்ரோஷமான அதிரடியான ஆட்டத்தை விளையாடுகிறார்கள். அதைத்தான் விராட் கோலி பெங்களூரு அணியில் கொண்டு வருகிறார். எனவே வருங்காலங்களில் பெங்களூரு அணியை விராட் கோலி தலைமை தாங்கி நடத்திச் செல்வதை நான் பார்க்க விரும்புகிறேன்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்