"2011 உலகக்கோப்பை அரையிறுதியில் நான் விளையாடியிருந்தால் அதை செய்திருப்பேன் " - சோயிப் அக்தர்
|சச்சினின் மகத்தான பங்களிப்பால் இந்திய அணி அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
கராச்சி,
கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தி இருந்தது. இந்த தொடரின் அரையிறுதியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, சச்சின் டெண்டுல்கர் 85 ரன்கள் குவிக்க, 260 ரன்களை எடுத்தது. இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 231 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாகிஸ்தான் தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் இந்த போட்டியின் பிளெயிங் லெவெனில் தான் விளையாடி இருந்தால் போட்டியின் முடிவுகள் மாறி இருக்கும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.
இந்த போட்டி குறித்து அவர் கூறியதாவது :
2011 உலகக் கோப்பை அரையிறுதி போட்டி குறித்து இப்போதும் நான் வருத்தம் அடைகிறேன். அந்த போட்டியில் இந்தியா மிகப்பெரிய அழுத்தத்தில் இருந்ததை நான் அறிவேன். அதனால் நாங்கள் அழுத்தம் இல்லாமல் இருந்திருக்க வேண்டும். நான் அன்று விளையாடியிருந்தால், சேவாக் மற்றும் சச்சின் விக்கெட்டை வீழ்த்தியிருப்பேன். இந்த இரண்டு வீரர்களையும் முதலிலே வீழ்த்தி இருந்தால், இந்திய அணி பின்தங்கி இருக்கும்.
ஆனால் அந்த போட்டியில் எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அந்த நேரத்தில் அணி நிர்வாகம் நடந்துகொண்டது நியாயமற்றது. உடற்தகுதியை காரணம் காட்டி அன்று அணி நிர்வாகத்தினர் எனக்கு வாய்ப்பு வழங்கவில்லை. இருப்பினும் பயிற்சியில் நான் தொடர்ச்சியாக 8 ஓவர்கள் வீசினேன். போட்டியில் தோல்வி அடைந்ததற்காக நான் அழுதது கிடையாது. ஆனால் அன்று ஓய்வறையில் ஒரு சில பொருட்களை உடைத்தேன். நான் ஏமாற்றமடைந்தது போல் எங்கள் தேசமும் அன்று ஏமாற்றம் அடைந்தது.
இவ்வாறு அக்தர் பேசினார்.