டி20 உலகக்கோப்பை அணியில் உம்ரான் மாலிக்கை தேர்வு செய்திருப்பேன்- முன்னாள் தேர்வாளர் சொல்கிறார்
|முன்னாள் இந்திய அணி தேர்வாளரான திலிப் வெங்சர்க்கார், உம்ரான் மாலிக்கை குறித்து பேசியுள்ளார்.
சென்னை,
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் 16-ந்தேதி தொடங்கி நவம்பர் 13-ந்தேதி வரை தொடங்குகிறது. இந்தத் தொடரில் விளையாடும் அனைத்து அணிகளும், தங்களுடைய அணி வீரர்களை அறிவித்த நிலையில், தொடருக்கு தயாராகி வருகின்றன.
முதுகுவலி காரணமாக தென்ஆப்பிரிக்கா தொடரில் இருந்து விலகியுள்ளா பும்ரா டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்குப் பதிலாக முகமது ஷமி அல்லது தீபக் சாஹர் அணியில் சேர்க்கப்படலாம்.
இந்த நிலையில் முன்னாள் இந்திய அணி தேர்வாளரான திலிப் வெங்சர்க்கார், நான் தேர்வாளராக இருந்திருந்தால், இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக்கை அணியில் சேர்த்திருப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெங்சர்க்கார் கூறுகையில் ''உம்ரான் மாலிக் விஷயத்தில் மாற்றி யோசிக்க ஒன்றுமில்லை. நான் அவரை அணியில் தேர்வு செய்திருப்பேன். ஏனென்றால், அவரது வேகம். அவர் 150 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசுகிறார். நீங்கள் அவரை தற்போது தேர்வு செய்ய வேண்டும்.
அவர் 130 கி.மீட்டர் வேக பந்து வீச்சாளராக இருந்தால், தேர்வு செய்ய இயலாது. துபாய் போன்ற இடங்களில் ஆடுகளம் பிளாட்டாக புற்கள் இன்றி காணப்படும். அங்கு பவுன்ஸ் இருக்காது. ஆகவே, அணிக்கு அதிவேகப்பந்து வீச்சாளர்கள் தேவை. நீங்கள் மிதவேகப்பந்து வீச்சாளர்களுடன் சென்றால், தோற்கடிக்கப்படுவீர்கள்.
வேகப்பந்து வீச்சால் பேட்ஸ்மேன்களை வீழ்த்த, அதிவேக பந்து வீசாளர்கள் தேவை. அதேபோல் முகமது ஷமி, ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்" என்றார்.
ஜூன் மாதம் அயர்லாந்துக்கு எதிரான தொடரின்போது இந்திய அணிக்கு அறிமுகமான உம்ரான் மாலிக் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 150 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசி முன்னணி பேட்ஸ்மேன்களை திணறடித்ததன் விளைவாக, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.