அவர் விளையாடுவதை பார்க்க பணம் கொடுத்து கூட டிக்கெட் வாங்குவேன் - ஆஸி.முன்னாள் வீரர் பாராட்டு
|ரிஷப் பண்ட் ஒரு சிறந்த பவர் ஹிட்டராக இருப்பதாக ஆடம் கில்கிறிஸ்ட் பாராட்டியுள்ளார்.
சென்னை,
இந்தியா - வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டம் கடந்த 19ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 376 ரன்கள் குவித்தது.
இந்தியா தரப்பில் அஸ்வின் 113 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 149 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 227 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் எடுத்திருந்தது. இதன் மூலம் நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 308 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில் 3வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் இந்தியா தரப்பில் தொடர்ந்து பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் இருவரும் அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தனர். இருவரும் வங்காளதேசத்தின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
அதிரடியாக ஆடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். இதில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 109 ரன் (13 போர், 4 சிக்ஸ்) அடித்து அவுட் ஆனார். இதனையடுத்து இந்தியா 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இட்தனையடுத்து 515 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்காளதேசம் பேட்டிங் செய்து வருகிறது.
இந்நிலையில் ரிஷப் பண்ட் ஒரு சிறந்த பவர் ஹிட்டராக இருப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் பாராட்டியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "ரிஷப் பண்ட் என்னைவிட கொஞ்சம் அதிரடியான ஆட்டத்தை விளையாடுகிறார் என்று நினைக்கிறேன். அவருடைய ஆட்டம் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. நான் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்து பழக்கப்பட்டவன். ஆனால் ரிஷப் பண்ட் அச்சமே இல்லாமல் மிக அதிரடியாக விளையாடுகிறார். அவரிடம் எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால் அழுத்தமான வேளையில் கூட அதிரடியாக விளையாடி அதை எடுத்து விடுகிறார். உண்மையிலேயே பண்ட் விளையாடுவதை ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர்.
என்னை பொறுத்தவரை நானும் ரிஷப் பண்ட் விளையாடும் விதத்தை பார்க்க பணம் கொடுத்து கூட டிக்கெட் வாங்குவேன். அந்த அளவிற்கு அவருடைய ஆட்டம் என்னை கவர்ந்துள்ளது. இவ்வளவு பெரிய ஆபத்தில் சிக்கி பிழைத்து வந்துள்ளார். மிகவும் வேடிக்கையான ஒரு நல்ல வீரர் அவருக்கு எவ்வாறு கிரிக்கெட் போட்டிகளில் முன்னேறி சிறந்த முடிவுகளை பெற முடியும் என்பது தெரியும்" என்று கூறினார்.