இந்திய அணியின் கேப்டனாக செயல்பட வாய்ப்பு கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் - ஹர்திக் பாண்ட்யா
|வருங்காலத்தில் இந்திய அணியின் முழுநேர கேப்டனாக செயல்பட வாய்ப்பு கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
லாடெர்ஹில்,
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அமெரிக்காவின் லாடெர்ஹில்லில் நேற்று முன்தினம் இரவு நடந்த கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பெற்றது. இதில் இந்தியா நிர்ணயித்த 189 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் சுழல் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 15.4 ஓவர்களில் 100 ரன்னில் சரண் அடைந்தனர்.
டாப்-3 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் ஆட்டநாயகன் விருதை பெற்றார். 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்ததால் இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டனாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டார். கேப்டன்ஷிப் குறித்து 28 வயதான பாண்ட்யா கூறுகையில்,
'இந்திய அணியை வழிநடத்துவது சிறப்பு வாய்ந்த உணர்வை தருகிறது. வருங்காலத்தில் இந்திய அணியின் முழுநேர கேப்டனாக செயல்பட வாய்ப்பு கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் இப்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் மற்றும்20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிறது. அதற்கு அணியை தயார்படுத்துவதில் கவனம் செலுத்துவது முக்கியம்' என்றார். இந்த ஆண்டில் மூன்று வடிவிலான போட்டிகளையும் சேர்த்து இந்திய அணியில் 7 வீரர்கள் கேப்டனாக பணியாற்றி உள்ளனர்.