< Back
கிரிக்கெட்
நீங்கள் சிரித்தால்தான் காதலனுக்கு புரொபோஸ் செய்வேன்; ரசிகையின் கோரிக்கையை நிறைவேற்றிய கம்பீர்
கிரிக்கெட்

நீங்கள் சிரித்தால்தான் காதலனுக்கு 'புரொபோஸ்' செய்வேன்; ரசிகையின் கோரிக்கையை நிறைவேற்றிய கம்பீர்

தினத்தந்தி
|
17 May 2024 2:39 PM GMT

கவுதம் கம்பீர், தனது ரசிகையின் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளார்.

கொல்கத்தா,

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 17-வது ஐ.பி.எல். சீசனில் 2 முறை சாம்பியன் ஆன கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 19 புள்ளிகளுடன் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. இந்த வருடம் அந்த அணியின் எழுச்சிக்கு கவுதம் கம்பீர் முக்கிய காரணமாக திகழ்கிறார்.

ஏனெனில் 2012, 2014 ஆகிய வருடங்களில் கொல்கத்தா அணிக்கு கேப்டனாக கோப்பையை வென்று கொடுத்த அவர் தற்போது ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். அவருடைய வழிகாட்டுதலில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் அதிரடியான முடிவுகளை எடுத்து கொல்கத்தா வெற்றி நடை போட்டு வருகிறது. எடுத்துக்காட்டாக 2014 காலகட்டத்தில் ஓப்பனிங்கில் அசத்திய சுனில் நரைனை இந்த வருடம் மீண்டும் கவுதம் கம்பீர் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறக்கியுள்ளார்.

அணி வெற்றி பெற்றாலும் சரி, தோல்வியடைந்தாலும் சரி, களத்திலும் சரி எல்லா சூழ்நிலையிலும் கம்பீர் என்றுமே ஒரே ரியாக்சன் தான் கொடுப்பார்.

இந்த நிலையில் இதனை கிண்டல் செய்யும் விதமாக பெண் ஒருவர் மைதானத்தில் ஒரு பதாகை எந்தி அதில், " கம்பீர் சிரிக்கும் வரை நான் விரும்பும் நபரிடம் என் காதலை தெரிவிக்க மாட்டேன் (புரொபோஸ் - propose)" என்று கோரிக்கை வைத்திருந்தார். இது சமூக வலைதளத்தில் வைரலானது.

இதனைப்பார்த்த கம்பீர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அந்தப் பெண்ணின் புகைப்படத்துடன், தான் சிரிக்கும் புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டு இதோ நான் சிரித்து விட்டேன் என்பது போல் பதில் அளித்திருக்கிறார்.

கம்பீரின் இந்த ரியாக்சன் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் செய்திகள்