என் கடைசி மூச்சு உள்ள வரை அவரை மறக்க மாட்டேன் - இந்திய வீரரை பாராட்டிய இர்பான் பதான்
|இந்திய அணி வெற்றி பெற்றதால் வந்த மகிழ்ச்சியான கண்ணீர் துளிகள் என இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
மும்பை,
ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை தொடர் 2007-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. முதலாவது உலகக் கோப்பையை டோனி தலைமையிலான இந்திய அணி வென்று வரலாறு படைத்தது. அதன்பின் நடைபெற்ற தொடர்களில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியும் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை. 17 ஆண்டுகள் கழித்து டி20 உலகக்கோப்பையை தற்போது இந்தியா வென்றுள்ளது. நீண்டகால உலகக் கோப்பை ஏக்கத்தை தணித்த இந்திய அணியினர் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்கள்.
அதன்படி நடைபெற்ற இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை உச்சிமுகர்ந்தது. இதில் இந்தியா நிர்ணயித்த 177 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்கா ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுக்கு 151 ரன்களுடன் வலுவான நிலையில் இருந்தது. அப்போது அந்த அணிக்கு 24 பந்தில் 26 ரன் மட்டுமே தேவையாக இருந்தது.
ஆனால் ஹென்ரிச் கிளாசெனின் (5 சிக்சர், 2 பவுண்டரியுடன் 52 ரன்) விக்கெட்டை பாண்ட்யா கழற்றியது, 18-வது ஓவரில் பும்ரா ஒரு விக்கெட் எடுத்து 2 ரன் மட்டுமே வழங்கி மிரட்டியது, இறுதி ஓவரின் முதல் பந்தில் டேவிட் மில்லர் (21 ரன்) தூக்கியடித்த பந்தை எல்லைக்கோடு அருகே மிக லாகவமாக சூர்யகுமார் பிடித்தது இப்படி திக்...திக்...திக் திருப்பங்களுடன் ஆட்டமும் இந்தியா பக்கம் சாய்ந்தது. 20 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்டுக்கு 169 ரன்னில் அடங்கி கோப்பையை கோட்டை விட்டது. சூர்யகுமார் யாதவ் பிடித்த அந்த கேட்ச் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
நம்ப முடியாத கேட்சை பிடித்த அவரை பலரும் பாராட்டி உள்ள வேளையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் வெகுவாக பாராட்டி உள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "என் கடைசி மூச்சு உள்ளவரை சூர்யகுமார் யாதவையும் அவர் பிடித்த இந்த கேட்சையும் நான் மறக்க மாட்டேன். இந்த கண்ணீர் நான் இப்போது சோகமாக இருப்பதாலோ அல்லது வாழ்க்கையில் நடந்த விஷயங்களாலோ வந்தவை அல்ல. இவை அனைத்தும் இந்திய அணி வெற்றி பெற்றதால் வந்த மகிழ்ச்சியான கண்ணீர் துளிகள்" என்று கூறினார்.