முடிவைப் பற்றி நினைக்காமல் கடைசி ஓவரை வீச சென்றேன் - புவனேஷ்வர் குமார்
|10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது
ஐதராபாத்,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 50வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 76 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் அவேஷ் கான் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 202 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 1 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் திரில் வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதன் மூலம் புவனேஷ்வர் குமாருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்த பின்னர் புவனேஷ்வர் குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது, அமைதியாக இருப்பது என்னுடைய இயற்கை செயல்முறை. அதனால் நான் முடிவை பற்றி எதையும் நினைக்காமல் கடைசி ஓவரை வீச சென்றேன்.
அப்போது கம்மின்ஸ் என்னிடம் வந்து அனைத்தும் சரியாக இருக்கிறதா? என்று கேட்டார். அதை தவிர்த்து வேறு எதுவும் விவாதிக்கவில்லை. செயல்முறையில் மட்டும் கவனம் செலுத்தினேன். குறிப்பாக கடைசி 2 பந்துகளுக்கு போட்டியை எடுத்துச் சென்றால் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று நினைத்தேன். எக்ஸ்ட்ரா பீல்டரை நிறுத்துவதை பற்றி நினைக்கவில்லை.
பந்து அதிகமாக ஸ்விங்கானது. அது எங்கே ஸ்விங் ஆனது என்று சரியாக சொல்ல முடியவில்லை. இருப்பினும் ஸ்விங் கிடைக்கும் போது நீங்கள் விக்கெட் எடுக்க முயற்சிக்கலாம். அதிர்ஷ்டவசமாக அது எனக்கு கிடைத்தது.
சீசன் துவங்கும் போது என்னுடைய சிந்தனை செயல்முறை வித்தியாசமாக இருந்தது. ஆனால் நாங்கள் பேட்டிங்கில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய போது அது முற்றிலுமாக மாறியது. பொதுவாக நாங்கள் பந்து வீசும் போது எதிரணிகளை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்த முயற்சிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.