< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல். தொடரில் ஒன்றாக விளையாடிய ஜோ ரூட் அப்படி செய்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது - இந்திய வீரர்
கிரிக்கெட்

ஐ.பி.எல். தொடரில் ஒன்றாக விளையாடிய ஜோ ரூட் அப்படி செய்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது - இந்திய வீரர்

தினத்தந்தி
|
14 Sept 2024 4:57 PM IST

ஜேம்ஸ் ஆண்டர்சன் தம்மை ஸ்லெட்ஜிங் செய்ததாக துருவ் ஜூரல் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இளம் இந்திய வீரர் துருவ் ஜூரெல். அந்த தொடரின் 4-வது போட்டியில் இக்கட்டான சூழ்நிலையில் சிறப்பாக பேட்டிங் செய்து இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருது வென்றார். இவரது ஆட்டத்தை பார்த்து வியந்த சுனில் கவாஸ்கர், அடுத்த எம்.எஸ். தோனி உருவாகி வருவதாக பாராட்டு தெரிவித்தார்.

இந்நிலையில் அப்போட்டியில் இங்கிலாந்து மூத்த வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தம்மை ஸ்லெட்ஜிங் செய்ததாக துருவ் ஜூரல் கூறியுள்ளார். ஆனால் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக தம்முடன் ஒன்றாக விளையாடிய ஜோ ரூட் ஸ்லெட்ஜிங் செய்ததை தாம் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என ஜூரல் தெரிவித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "என்னுடைய இரண்டாவது போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. அப்போட்டியில் அனைத்தும் நன்றாக சென்று கொண்டிருந்தபோது விக்கெட்டுகள் விழுந்ததால் இங்கிலாந்து வீரர்கள் ரிலாக்ஸாக ஜாலியாக விளையாடினர். அப்போது என்னிடம் வந்த ஆண்டர்சன் நான் உன்னுடைய வீடியோக்களை பார்த்துள்ளேன் இது உன்னுடைய ஆட்டமல்ல என்று கூறினார். ஏனெனில் அப்போது நான் அதிக பந்துகளை எதிர்கொண்டு சிங்கிள்களை எடுத்தேன்.

அந்த சூழ்நிலையில் அவருக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் கொஞ்சம் பொறுமையாக இருந்து ரன்கள் அடித்தால் ஆண்டர்சன் அமைதியாக இருப்பார் என்று நினைத்தேன். அதன் பின் கவனமாக விளையாடுவதற்கு பதிலாக நேர்மறையாக விளையாட வேண்டும் என்று நினைத்தேன். அதனால் சோயப் பஷீரை நான் அதிரடியாக எதிர்கொண்டேன். என்னுடைய இடத்தில் போட்டால் யாரும் என்னை தடுக்க முடியாது என்பது எனக்குத் தெரியும். பின்னர் குல்தீப் யாதவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்தேன். அன்றைய நாள் முடிவில் 30 ரன்கள் எடுத்திருந்த நான் மறுநாள் பழைய பந்தில் அரை சதமடிக்கலாமா என்று யோசித்தேன்.

அடுத்த நாளில் 36 ரன்களில் இருந்தபோது மீண்டும் ஆண்டர்சன் பந்து வீச வந்தார். அப்போது ஆக்ரோஷமாக பந்து வீசிய அவர் தொடர்ச்சியாக என்னை ஸ்லெட்ஜிங் செய்தார். ஆங்கிலேய வடிவத்தில் அவர் சொன்ன வார்த்தைகள் எனக்கு கொஞ்சம் புரியவில்லை. அவருடன் ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் ஆகியோரும் சேர்ந்து கொண்டனர். அதில் ஐபிஎல் தொடரில் என்னுடன் ஒன்றாக விளையாடியும் ஜோ ரூட் என்னை ஸ்லெட்ஜிங் செய்தது எனக்கு ஆச்சரியமாக அமைந்தது. அவரிடம் ஏன் என்னை ஸ்லெட்ஜிங் செய்கிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு நாம் அனைவரும் தற்போது நாட்டுக்காக விளையாடுகிறோம் என்று அவர் சொன்னார்" என கூறினார்.

மேலும் செய்திகள்