< Back
கிரிக்கெட்
கடினமாக உழைத்து அந்த அணியில் இடம் பிடிக்க விரும்புகிறேன் - சூர்யகுமார் யாதவ் விருப்பம்
கிரிக்கெட்

கடினமாக உழைத்து அந்த அணியில் இடம் பிடிக்க விரும்புகிறேன் - சூர்யகுமார் யாதவ் விருப்பம்

தினத்தந்தி
|
27 Aug 2024 3:20 PM IST

இளம் வீரர்கள் தற்போது சிறப்பாக விளையாடி வருகின்றனர் என்று சூர்யகுமார் தெரிவித்துள்ளார்.

மும்பை,

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் இந்திய அணி இலங்கையை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்தது. அதன்மூலம் அவரது கேப்டன்ஷிப் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியுள்ளார். டி20 கிரிக்கெட்டை பொறுத்த வரை உலகின் நம்பர் 1 வீரராக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மைதானத்தின் அனைத்து புறமும் பவுலர்களை வெளுத்து வாங்கும் திறமையை கொண்டவர்.

முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவரான அஜித் அகர்கர், சூர்யகுமார் யாதவை தற்சமயம் டி20 வீரராக மட்டுமே பார்ப்பதாக கூறினார். ஏனெனில் ஒருநாள் போட்டிகளில் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் தடுமாற்றமாகவே செயல்பட்டார். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான சூர்யகுமாருக்கு அறிமுகப் போட்டிக்கு பின் இன்னும் மறு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தற்போது டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் அவர் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விளையாட கவனத்தை செலுத்தி வருகிறார். குறிப்பாக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்கும் முனைப்புடன் கடினமாக உழைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது உள்ளூர் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் சூர்யகுமார் யாதவ் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் தன்னுடைய இடத்தை உறுதி செய்யும் வகையில் விளையாட விரும்புவதாக அவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், "இந்திய டெஸ்ட் அணியில் என்னுடைய இடத்தை உறுதி செய்யும் வகையில் விளையாட விரும்புகிறேன். கடினமாக உழைத்து டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க போகிறேன். இளம் வீரர்கள் தற்போது சிறப்பாக விளையாடி வருகின்றனர். நான் டெஸ்ட் போட்டிகளில் முன்பே அறிமுகமாகி இருந்தாலும் என்னால் தொடர்ச்சியாக விளையாட முடியாமல் போனது. எதிர்வரும் உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக விளையாடி டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க முயற்சிப்பேன்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்