< Back
கிரிக்கெட்
இங்கிலாந்து தோல்வியை சந்திப்பதை நான் பார்க்க விரும்புகிறேன் - ஆஸி.முன்னாள் கேப்டன்

Image Courtesy: AFP

கிரிக்கெட்

இங்கிலாந்து தோல்வியை சந்திப்பதை நான் பார்க்க விரும்புகிறேன் - ஆஸி.முன்னாள் கேப்டன்

தினத்தந்தி
|
9 March 2024 11:05 AM IST

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

மெல்போர்ன்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிவிட்டது.

இரு அணிகளுக்கும் இடையிலான 5வது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்த இங்கிலாந்து அடுத்த 3 போட்டிகளில் தொடர் தோல்வி கண்டு டெஸ்ட் தொடரை இழந்தது.

இந்நிலையில் இந்த தொடரில் இங்கிலாந்து தோல்வியை சந்தித்ததை பார்ப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் டிம் பெய்ன் கூறியுள்ளார். மேலும், கோலி, ஷமி, பண்ட், ராகுல் இல்லாத இந்தியா பி அணியிடம் இங்கிலாந்து தோல்வியை சந்தித்ததாக மற்றொரு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹேடின் விமர்சித்துள்ளார்.

இது பற்றி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிராட் ஹேடின் பேசியதாவது, இந்த தொடரில் ஸ்டோக்ஸ் அபாரமாக செயல்பட்டதால் அவரை குறை சொல்ல முடியாது. இந்திய துணைக் கண்டத்தில் கடினமான சூழ்நிலைகளில் இங்கிலாந்து இளம் சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டிருந்தது.

டாம் ஹார்ட்லி, ரெகான் அகமது, சோயப் பஷீர் ஆகியோர் நன்றாகவே செயல்பட்டனர். ஸ்டோக்ஸ் அதற்காக பாராட்டுக்குரியவர். ஆனால் இந்த தொடரில் அவர்கள் இந்தியா பி அணிக்கு எதிராகவே விளையாடினர். ஏனெனில் விராட் கோலி, ஷமி, பண்ட், ராகுல் இல்லை. பும்ரா கடந்த போட்டியில் ஓய்வு எடுத்தார். அந்த வகையில் இந்தியா வலுவான அணியாக இல்லை. இருப்பினும் இது இந்திய கிரிக்கெட்டின் ஆழத்தை காண்பிக்கிறது.

இந்திய கிரிக்கெட்டுக்கு அடுத்த சகாப்தத்தில் ரன்கள் அடிப்பதற்கு பெரிய பெயர்கள் வந்துள்ளன. ஜெய்ஸ்வால் முன்னின்று அசத்தும் நிலையில் ஜூரெல் கடந்த போட்டியில் அபாரமாக விளையாடினார். எனவே இந்தியா வலுவான அணியாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற டிம் பெய்ன் கூறியதாவது, ஹேடின் சொன்னதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இந்தியா பி அணியிடம் தோல்வியை சந்தித்த உணர்வு பற்றி 2020/21 பார்டர் - கவாஸ்கர் கோப்பையில் எனக்கு தெரியும். துரதிர்ஷ்டவசமாக அது எங்களுடைய சொந்த மண்ணில் நடந்தது.

ஆனால் இத்தொடரில் இந்திய அணியில் பெரிய வீரர்கள் இல்லாதது இங்கிலாந்துக்கு உதவி செய்திருக்க வேண்டும். இங்கிலாந்து விளையாடிய விதத்தை நான் விரும்புகிறேன். அவர்கள் தோல்வியை சந்திப்பதை நான் பார்க்க விரும்புகிறேன். இதை தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஆனால் அவர்கள் பொழுதுபோக்கை ஏற்படுத்தும் வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்