என்னுடைய அணிக்காக இதே போல தொடர்ந்து செயல்பட விரும்புகிறேன் - ஆட்டநாயகன் நிதிஷ் ரெட்டி
|ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
முல்லன்பூர்,
ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டம் முல்லன்பூரில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐதராபாத் தரப்பில் அதிரடியாக ஆடிய நிதிஷ் ரெட்டி 64 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 180 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் முலம் 2 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி திரில் வெற்றி பெற்றது.
இதையடுத்து இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த நிதிஷ் ரெட்டிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, என்னைப் பொறுத்த வரை இது என்னுடைய அணிக்கும் எனக்கும் மிகப்பெரிய பங்களிப்பாகும். அணிக்காக அசத்துவதற்கு என்னை நான் நம்ப வேண்டும் என்று எனக்குள் சொல்லிக் கொண்டிருந்தேன். வேகப்பந்து வீச்சாளர்கள் நன்றாக பந்து வீசினார்கள்.
எனவே அவர்களை அடிக்க நான் விரும்பவில்லை. சுழற்பந்து வீச்சாளர்கள் வருவார்கள் என்று எனக்கு தெரியும். நான் அவர்களை அடிக்க விரும்பினேன். போட்டி முழுவதும் வேகப்பந்து வீச்சாளார்கள் ஸ்லோயர் பவுன்சர்களை வீசினார்கள் அது வேலை செய்தது. நானும் மைதானத்தை நன்கு பயன்படுத்தினேன். என்னுடைய அணிக்காக இதே போல தொடர்ந்து செயல்பட விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.