'இங்கிலாந்து அணியின் கேப்டனாக தொடர்ந்து செயல்பட விரும்புகிறேன்'- ஜோஸ் பட்லர்
|உலகக்கோப்பை தொடர் நிறைவடைந்ததும் இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.
லண்டன்,
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடந்து முடிந்த லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.
இதில் பங்கேற்றுள்ள நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி 8 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றிகள் மற்றும் 6 தோல்விகளுடன் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் நாளை மோத உள்ளது. இதில் வெற்றி பெற்றால் எந்த வித சிக்கலுமின்றி 2025ல் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் கோப்பைக்கு தகுதிபெறும். மாறாக தோல்வி அடைந்தால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டிருக்கும்.
உலகக்கோப்பை தொடர் நிறைவடைந்ததும் இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் லீக் சுற்றுடன் வெளியேறினாலும் அடுத்து வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு கேப்டனாக நீடிக்க விரும்புவதாக இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;- 'அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ள டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் அணியை வழிநடத்த விரும்புகிறேன். இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைவர் ராப் கீ இந்தியாவிற்கு வந்து எங்களுடன் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணித்தேர்வு குறித்து பேச உள்ளார் என்பது எனக்கு தெரியும். அவரிடம் இது குறித்து பேசுவேன். இந்த உலகக்கோப்பை தொடரில் என்னால் அணிக்காக ரன்கள் குவிக்க முடியாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. நான் இதிலிருந்து மீண்டு திரும்பவும் பார்முக்கு வருவேன். நாங்கள் நினைத்தது போன்று இந்த தொடரில் விளையாடவில்லை' என கூறியுள்ளார்.