ஆர்.சி.பி அணியின் அடுத்த போட்டியில் மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக இவர் விளையாடுவார் என நினைக்கிறேன் - ஆகாஷ் சோப்ரா
|பெங்களூரு அணியில் பேட்டிங்கில் கோலியை தவிர மற்ற வீரர்கள் யாரும் எதிர்பார்ப்புக்கு ஏற்றார் போல் ஆடவில்லை.
மும்பை,
10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள 17 லீக் ஆட்டங்களின் முடிவில் கொல்க்கதா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.
கோலி, டு பிளெஸ்சிஸ், மேக்ஸ்வெல், க்ரீன், தினேஷ் கார்த்திக், சிராஜ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களை கொண்ட பெங்களூரு அணி இதுவரை 4 ஆட்டங்களில் ஆடி ஒரே ஒரு வெற்றி மட்டும் பெற்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. இதனால் பெங்களூரு ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.
பெங்களூரு அணியால் தற்போது உள்ள பவுலிங்கை வைத்துக்கொண்டு கோப்பையை வெல்ல முடியாது என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. பெங்களூரு அணியில் பேட்டிங்கில் கோலியை தவிர மற்ற வீரர்கள் யாரும் எதிர்பார்ப்புக்கு ஏற்றார் போல் ஆடவில்லை.
அதிலும் குறிப்பாக அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் 4 ஆட்டங்களில் முறையே 0 ரன், 3 ரன், 28 ரன், 0 ரன் எடுத்துள்ளார். இந்நிலையில், ஆர்.சி.பி அணியின் அடுத்த போட்டியில் மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக வில் ஜாக்ஸ் விளையாடுவார் என நினைக்கிறேன் என்று இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
வில் ஜாக்ஸ் விளையாடப் போகிறார் என்று நினைக்கிறேன். மேக்ஸ்வெல் முதலில் வெளியேற்றப்படலாம். அவருக்கு பதிலாக ஜாக்ஸ் களம் இறங்கலாம். ஆனால் அவ்வாறு செய்வதன் மூலம் கேப்டன் டு பிளெஸ்சிஸ் அழுத்தத்திற்கு உள்ளாகலாம்.
ஏனேனில் ஜாக்ஸ் தொடக்க ஆட்டக்காரர் என்பதால் கேப்டனுக்கு அழுத்தம் வரும். அது நடக்கும் என்று உணர்கிறேன். வில் ஜாக்ஸூக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று பார்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.