< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பையை வென்றபோது அவர் கண்களில் வலியை பார்த்தேன் -  அஸ்வின்
கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பையை வென்றபோது அவர் கண்களில் வலியை பார்த்தேன் - அஸ்வின்

தினத்தந்தி
|
23 July 2024 4:33 PM IST

ஒருநாள் உலகக்கோப்பையில் தோல்வியை சந்தித்த அதே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இம்முறை டிராவிட் பயிற்சியாளராக உலகக்கோப்பையை வென்றதாக அஸ்வின் பாராட்டியுள்ளார்.

சென்னை,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இதில் கடந்த மாதம் 29-ம் தேதி நடைபெற்ற இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை உச்சிமுகர்ந்தது. இதில் இந்தியா நிர்ணயித்த 177 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்கா ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுக்கு 151 ரன்களுடன் வலுவான நிலையில் இருந்தது. அப்போது அந்த அணிக்கு 24 பந்தில் 26 ரன் மட்டுமே தேவையாக இருந்தது.

ஆனால் அங்கிருந்து கம்பேக் கொடுத்த இந்தியா கோப்பையை வென்று அசத்தியது. அந்த வெற்றியுடன் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றனர். அதேபோல வீரராக வெல்லாத உலகக்கோப்பையை பயிற்சியாளராக வென்று ராகுல் டிராவிட் விடை பெற்றார்.

இந்நிலையில் 2007-ல் ஒருநாள் உலகக்கோப்பையில் தோல்வியை சந்தித்த அதே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இம்முறை டிராவிட் பயிற்சியாளராக உலகக்கோப்பையை வென்றதாக ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார். மேலும் உலகக் கோப்பையை கொடுத்த விராட் கோலியை கட்டிப்பிடித்து அழுத ராகுல் டிராவிட் ஆனந்தக் கண்ணீரில் 2007 வலியை பார்த்ததாகவும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-"ராகுல் டிராவிட்டை அழைத்து விராட் கோலி கோப்பையை கொடுத்ததே எனக்கு பிடித்த தருணம். அதை வாங்கிய டிராவிட் அவரை கட்டிப்பிடித்து அழுதார். அப்போது அவர் கண்களில் வலியை பார்த்தேன். இங்கே நான் ஒரு புனிதமான நபரை பற்றி பேச விரும்புகிறேன். குறிப்பாக 2007-ல் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பையில் டிராவிட் தலைமையில் இந்தியா நாக் அவுட் செய்யப்பட்டது. அதனால் அந்த காலகட்டங்களில் இந்தியா ஒரு போட்டியில் தோற்றால் உடனே ராகுல் டிராவிட் என்ன செய்கிறார் என்று கேட்டனர்.

அப்படிப்பட்ட ராகுல் டிராவிட் கடந்த 2 - 3 வருடங்களாக இந்திய அணியில் என்ன செய்தார் என்பதை நான் அறிவேன். மிகவும் சமநிலையுடன் இருந்த அவர் இந்திய அணியின் அணுகுமுறையை மாற்ற எவ்வளவு கடினமாக உழைத்தார் என்பதும் எனக்கு தெரியும். வீட்டிலிருந்த போது கூட அணியின் வெற்றிக்காக திட்டமிட்ட அவர் ஒவ்வொரு வீரருக்கும் என்ன செய்தார் என்பதும் தெரியும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்