உலகக் கோப்பையின் போதே பார்த்துள்ளேன்..அவர் சூப்பர் ஸ்டார் வீரராக வருவார் - இளம் வீரரை பாராட்டிய நாதன் லயன்
|நியூசிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது.
வெல்லிங்டன்,
நியூசிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 383 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சிறப்பாக விளையாடிய கேமரூன் கிரீன் 174 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக மேட் ஹென்ரி 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி, ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 179 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 71 ரன்களும், மேட் ஹென்ரி 42 ரன்களும் அடித்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் லயன் 4 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளும், ஸ்டார்க், கம்மின்ஸ் மற்றும் மார்ஷ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 204 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 2-வது நாளில் 2 விக்கெட்டுகளை இழந்து 13 ரன்கள் எடுத்தது. உஸ்மான் கவாஜா 5 ரன்களுடனும், லயன் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
நேற்று 3ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 164 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக நாதன் லயன் 41 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணி தரப்பில் கிளென் பிலிப்ஸ் 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.
இதனால் முன்னிலை ரன்கள் சேர்த்து நியூசிலாந்து அணிக்கு 369 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 369 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்ததுள்ளது. ரவீந்திரா 56 ரன்கள் , டேரில் மிட்சேல் 12 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர். நியூசிலாந்து வெற்றி பெற இன்னும் 258 ரன் தேவைப்படுகிறது.
இந்நிலையில் 3ம் நாள் ஆட்டம் முடிந்த பின் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் அளித்த பேட்டியில் கூறியதாவது, உண்மையாக ரச்சின் நல்ல வீரராக தெரிகிறார். இந்த போட்டியில் தான் அவருக்கு எதிராக முதல் முறையாக நான் பந்து வீசினேன். கடந்த உலகக் கோப்பையின் போது அவருடைய ஆட்டத்தை நான் பார்த்துள்ளேன்.
அவர் சூப்பர் ஸ்டார் வீரராக வருவார். ஆனால் தற்சமயத்தில் நாங்கள் நியூசிலாந்தின் மீது தடுப்பாட்டத்தை நீண்ட நேரம் போட்டால் அவர்களின் பார்ட்னர்ஷிப்பை உடைத்து வெற்றி காண முடியும் என்பது எங்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.