< Back
கிரிக்கெட்
பாதம் எப்படி இருந்தாலும் நான் பந்து வீச தயார் என்று கேப்டனிடம் கூறினேன் - ஆஸியை வீழ்த்திய ஆட்டநாயகன் பேட்டி

image courtesy; ICC

கிரிக்கெட்

பாதம் எப்படி இருந்தாலும் நான் பந்து வீச தயார் என்று கேப்டனிடம் கூறினேன் - ஆஸியை வீழ்த்திய ஆட்டநாயகன் பேட்டி

தினத்தந்தி
|
28 Jan 2024 5:09 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

பிரிஸ்பேன்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.

இந்த 2-வது டெஸ்ட் போட்டியில் 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 8 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷமர் ஜோசப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இந்த போட்டியில் 2 இன்னிங்சிலும் சேர்த்து 8 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்திய ஷமர் ஜோசப் ஆட்டநாயகன் விருதை வென்றார். மேலும் 2 போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 13 விக்கெட்டுகள் எடுத்த அவர் தொடர்நாயகன் விருதையும் தட்டி சென்றார். முன்னதாக இப்போட்டியில் 2வது இன்னிங்சில் பேட்டிங் செய்தபோது அவருடைய பாதம் மிட்சேல் ஸ்டார்க் வீசிய யார்க்கர் பந்தில் காயமடைந்தது.

அதனால் வலியால் துடித்த அவர் மேற்கொண்டு பேட்டிங் செய்ய முடியாமல் பாதியிலேயே வெளியேறினார். அதன் காரணமாக முக்கியமான 2வது இன்னிங்சில் விளையாடுவாரா என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் முதலுதவியை மட்டும் எடுத்துக்கொண்டு அட்டகாசமாக பந்து வீசி 7 விக்கெட்டுகளை சாய்த்து வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற உதவினார்.

இந்நிலையில் எதிரணியின் கடைசி விக்கெட் விழும் வரை பந்து வீசி போராடத் தயார் என்று கேப்டனிடம் தெரிவித்ததாக சமர் ஜோசப் கூறியுள்ளார். இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு;- "என்னுடைய அணி வீரர்கள் கொடுத்த ஆதரவுக்கு பாராட்டுகள். இன்று என்னால் மைதானத்திற்கு கூட வர முடியாத நிலைமை இருந்தது. ஆனால் என்னுடைய பாதத்தில் ஏதோ செய்து நடக்க வைத்த டாக்டருக்கு நன்றி. விக்கெட்டுகள் எடுக்க எடுக்க எங்களுக்கு நேர்மறையான எண்ணங்கள் வந்தன.

1 - 1 என்ற கணக்கில் சமன் செய்ததே தொடரை வென்றது போன்ற உணர்வை கொடுக்கிறது. என்னுடைய கண்களில் கண்ணீர் வருகிறது. 5 விக்கெட்டுகள் எடுத்த போதே நான் அழுது விட்டேன். இது கடினம் என்றாலும் என்னுடைய அணிக்காக செய்தேன். இன்றைய நாள் துவக்கத்தில் எதிரணியின் கடைசி விக்கெட் கிடைக்கும் வரை என்னுடைய பாதம் எப்படி இருந்தாலும் நான் பந்து வீச தயார் என்று கேப்டனிடம் கூறினேன். அவருக்காக அதை செய்த நான் தற்போது பெருமையடைகிறேன்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்