என்னுடைய ஆட்டத்தில் இன்னும் நிறைய முன்னேற்றங்களை நான் காண வேண்டும் - ஷிவம் துபே
|ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் ஷிவம் துபே தொடர் நாயகன் விருது வென்றார்.
பெங்களூரு,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது. இந்த தொடரில் 3 போட்டிகளிலும் சேர்த்து 124 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய ஷிவம் துபே தொடர் நாயகன் விருது வென்றார்.
இந்நிலையில் தொடர் நாயகன் விருது வென்றுள்ள துபே, அது குறித்து பேசியது பின்வருமாறு;-"ஆல் ரவுண்டராக நீங்கள் எப்போதும் தொடர் நாயகன் விருது வெல்வதை விரும்புவீர்கள். இந்த விருது என்னுடைய வாழ்வில் புதிய சாதனையாக வென்றுள்ளேன். இது நல்ல உணர்வை கொடுக்கிறது.
நாங்கள் இந்த மைதானத்தில் நிறைய ரன்கள் அடித்தோம். சூப்பர் ஓவருக்கு முன்பாகவே நாங்கள் வெல்வோம் என்று நினைத்தோம். ஆனால் இன்று 2 அணிகளும் சிறப்பாக விளையாடின. இப்போதும் என்னுடைய ஆட்டத்தில் நிறைய முன்னேற்றங்களை நான் காண வேண்டும். குறிப்பாக என்னுடைய பந்து வீச்சில் முன்னேற்றம் காண வேண்டும். அதை ஒவ்வொரு போட்டியிலும் நான் முன்னேற்ற முயற்சிப்பேன்" என்று கூறினார்.