"கிங்" என்று என்னை அழைக்காதீர்கள்... ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்த விராட் கோலி
|நீங்கள் என்னை கிங் என்று குறிப்பிடும்போது எனக்கு கூச்சமாக உள்ளது என்று தனது ரசிகர்களிடம் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
2024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அன்பாக்ஸ் நிகழ்வில் நட்சத்திர வீரர் விராட் கோலி ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், "என்னை கிங் என சொல்வதை நிறுத்துங்கள். நீங்கள் அப்படி கூறும்போது எனக்கு கூச்சமாக உள்ளது. இனிமேல் என்னை விராட் என அழைத்தால் போதும்" என்று விராட் கோலி தெரிவித்தார்.
முன்னதாக விராட் கோலிக்கு ரசிகர்களிடம் பல செல்லப்பெயர்கள் உள்ளன. அதில் 'கிங் கோலி' என்பது மிகவும் பிரபலமானது. தற்போது இந்தியன் பிரீமியர் லீக் 2024 க்காக அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் இணைந்துள்ளார்.