< Back
கிரிக்கெட்
ரிஷப் பண்ட் இனி  கிரிக்கெட் விளையாட முடியாதோ என்று அச்சமடைந்தேன் - மனம் திறந்த பாண்டிங்

image courtesy:PTI

கிரிக்கெட்

ரிஷப் பண்ட் இனி கிரிக்கெட் விளையாட முடியாதோ என்று அச்சமடைந்தேன் - மனம் திறந்த பாண்டிங்

தினத்தந்தி
|
29 May 2024 7:36 PM IST

ரிஷப் பண்ட் சந்தித்த கடினமான காலம் குறித்து டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் சில கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

சிட்னி,

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 17-வது ஐ.பி.எல். தொடரில் விளையாடிய ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது 14 போட்டிகளில் விளையாடி 7 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்து வெளியேறியது. இருப்பினும் டெல்லி அணியின் சிறப்பான செயல்பாடு அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று இருந்தது.

குறிப்பாக 2022-ம் ஆண்டு இறுதியில் சாலை விபத்தில் சிக்கி பெரிய பாதிப்பை சந்தித்திருந்த ரிஷப் பண்ட் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு கிளம்பி தனது மிகச்சிறப்பான ஆட்டத்தை விளையாடி இருந்தார். அவரது இந்த கம்பேக் அனைவரது பார்வையையும் திரும்ப வைக்கும் வகையில் அமைந்தது. அதோடு இந்த தொடரில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய காரணத்தினால் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் அவர் இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது ரிஷப் பண்ட் சந்தித்த கடினமான காலம் குறித்து டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் சில கருத்துகளை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "கடந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரின்போது ரிஷப் பண்ட் உடன் இரண்டு மாதங்களை நான் முழுவதுமாக செலவிட்டேன். அப்போது அவருக்கு விபத்து ஏற்பட்டு 3,4 மாதங்கள்தான் ஆகியிருந்தது. அப்போது நான் அவரை பார்க்கையில் இனி அவரால் கிரிக்கெட் விளையாட முடியாதோ என்ற பெரிய அச்சம் ஏற்பட்டது.

ஏனெனில் உடல் அளவிலும், மனதளவிலும் அவர் மோசமான காயங்களை சந்தித்திருந்தார். அந்த நேரத்தில் அவரால் சரியாக நடக்கக்கூட முடியவில்லை. ஊன்றுகோலின் உதவியுடன்தான் நடந்தார். அப்போது நான் அவரிடம் அடுத்த ஆண்டு ஐபிஎல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர் என்னை பார்த்து: 'நீங்கள் கவலைப்பட வேண்டாம், நிச்சயம் நான் அடுத்த ஆண்டிற்குள் தயாராகி விடுவேன்' என்று கூறியிருந்தார். அவர் கூறியபடி இந்த ஆண்டு அணிக்கு கம்பேக் கொடுத்தது மட்டுமின்றி மிகச்சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தினார்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்