டி20 உலகக் கோப்பை வரை ரோகித் கேப்டனாக நீடிப்பார் என்று எதிர்பார்க்கிறேன் - இந்திய முன்னாள் வீரர்
|இந்திய அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
புதுடெல்லி,
இந்திய அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் அணி விளையாடி வருகிறது.
முன்னதாக 2022 டி20 உலகக்கோப்பை தோல்விக்கு பின் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற சீனியர் வீரர்கள் டி20 அணியில் இடம்பெறவில்லை. அதனால் 2024-ல் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
இந்நிலையில் 2024 டி20 உலகக்கோப்பையிலும் ரோகித் சர்மாதான் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட வேண்டும் என்று முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;-
50 ஓவர் உலகக் கோப்பையில் ரோகித் சர்மா சிறப்பாக செயல்பட்டதால் அவர் இந்திய அணிக்கு கேப்டனாக இருக்க வேண்டும். அவர் ஒரு சிறந்த கேப்டன். எனவே டி20 உலகக் கோப்பை வரை அவர் கேப்டனாக நீடிப்பார் என்று நான் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.