உங்களுடைய தலை கீழே குனிவதை பார்க்க விரும்பவில்லை - பண்ட் மீது பாசத்தை பொழிந்த கவாஸ்கர்
|ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி பெற்றது.
டெல்லி,
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 89 ரன்கள் அடித்தார்.
இதையடுத்து 267 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 199 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஐதராபாத் அணி 67 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக ஜேக் ப்ரேசர்-மெக்குர்க் 65 ரன்கள் அடித்தார்.
ஐதராபாத் தரப்பில் தமிழக வீரர் நடராஜன் 4 ஓவர்களில் 1 மெய்டனுடன் 19 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய டிராவிஸ் ஹெட்டுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ஐதராபாத் அணி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
இந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பின் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் தனது தலையை தொங்கப் போட்டுக்கொண்டு மிகவும் சோகத்துடன் பேட்டி கொடுக்க வந்தார். அப்போது வர்ணனையாளராக பேசிய முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர்,
நான் எப்போதும் உங்களுடைய தலை கீழே குனிவதை பார்க்க விரும்பவில்லை. இங்கே நிறைய போட்டிகள் இருக்கிறது. எனவே தொடர்ந்து சிரியுங்கள் என்று கூறினார். அதற்கு ரிஷப் பண்ட், நன்றி சார் . நான் என்னுடைய சிறந்த செயல்பாடுகளை கொடுக்க முயற்சிக்கிறேன் சார் என்று புன்னகை முகத்துடன் பதிலளித்தார்.