< Back
கிரிக்கெட்
அடுத்த ஷமியாக நான் மாற விரும்பவில்லை - ஆகாஷ் தீப்
கிரிக்கெட்

அடுத்த ஷமியாக நான் மாற விரும்பவில்லை - ஆகாஷ் தீப்

தினத்தந்தி
|
13 Sept 2024 9:38 PM IST

ஆகாஷ் தீப் தான் முகமது ஷமியாக மாற விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக வங்காளதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் ஆகாஷ் தீப் இடம்பெற்றுள்ளார்.

இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் கடந்த ஏப்ரல் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். அந்த அறிமுக போட்டியிலேயே நன்றாக பந்து வீசிய அவர் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

அதைத் தொடர்ந்து 2024 துலீப் கோப்பையில் இந்தியா ஏ அணிக்காக விளையாடிய அவர் பி அணிக்கு எதிரான முதல் ரவுண்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனால் அடுத்ததாக வங்காளதேச தொடரில் அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதனால் இவர் மீது அனைவரது மத்தியிலும் இருந்து அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதேபோன்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலியும் இவரை அடுத்த முகமது ஷமி என்று பாராட்டியுள்ளதால் கூடுதல் எதிர்பார்ப்பு இவரிடம் உள்ளது.

இந்நிலையில் வங்காளதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக தற்போது பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஆகாஷ் தீப் பேசுகையில், "நான் முகமது ஷமியாக மாற விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். நான் எந்த ஒரு வீரரை போலவும் வர வேண்டும் என்று நினைக்கவில்லை. என்னுடைய செயல்பாட்டை சரியாக வெளிப்படுத்தி நானாக என்னுடைய திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். வேறு ஏதாவது ஒரு வீரருடன் போட்டி போடும் எண்ணம் இருந்தால் நிச்சயம் அது நமக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும். நான் அதைப் பற்றி எல்லாம் யோசிக்க போவது கிடையாது. என்னுடைய பலத்தில் கவனம் செலுத்த இருக்கிறேன். என்னுடைய கட்டுப்பாட்டில் என்ன இருக்கிறதோ அதை வைத்து சிறப்பாக செயல்பட்டு நிச்சயம் இந்திய அணிக்காக வெற்றியை தேடி தருவேன்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்