"2019 ஐபிஎல் இறுதிப்போட்டியில் நான் சிறப்பாக செயல்படவில்லை" - ஷர்துல் தாக்கூர்
|இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே) ஷர்துல் தாக்கூரை ரூ.4 கோடிக்கு வாங்கியது.
சென்னை,
10 அணிகள் பங்கேற்கும் 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது. இதையொட்டி 10 அணிகளிலும் கழற்றி விடப்பட்ட மற்றும் விலகிய வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை எடுப்பதற்கான ஏலம் துபாயில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே) ஷர்துல் தாக்கூரை ரூ.4 கோடிக்கு வாங்கியது. முன்னதாக 2018 முதல் 2021 வரை நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் சென்னை அணிக்காக இவர் விளையாடியுள்ளார். 2021 சீசனில் சிறப்பாக விளையாடி சிஎஸ்கே 4வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய அவரை மீண்டும் ஏலத்தில் எடுத்தது சென்னை அணியின் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது
அதன் பிறகு நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்காக விளையாடினார். ஆனால் அந்த அணிகளில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் தற்போது மீண்டும் சென்னைக்கு வாங்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் 2019 ஐபிஎல் இறுதிப்போட்டியில் நான் சிறப்பாக செயல்படவில்லை. இருப்பினும் சென்னை அணி நிர்வாகம் தம்மை ஆதரித்ததாக தாக்கூர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ' 2019 ஐபிஎல் இறுதிப்போட்டியில் நான் சிறப்பாக செயல்படவில்லை. இருப்பினும் சென்னை அணி நிர்வாகம் என்னை ஆதரித்தது. அதன் பின் 2 வருடங்கள் கழித்து அவர்களுடன் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சிஎஸ்கே அணிக்காக கோப்பையை வென்ற 2018, 2021 சீசன்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலராக நான் இருந்தேன். அதை இம்முறை மீண்டும் செய்ய முயற்சிப்பேன். சென்னையில் ரசிகர்களின் ஆரவாரம் அபாரமாக இருக்கும். குறிப்பாக தோனிக்காக அவர்கள் கொடுத்த ஆரவாரம் என்னுடைய வாழ்வில் நான் கேட்ட சத்தமான ஒன்றாகும்" என்று கூறினார்.