இந்த நிலை ஏற்படும் என்று நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை - தோல்வி குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் கருத்து
|நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் திரில் வெற்றி பெற்றது.
கொல்கத்தா,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. கொல்கத்தா தரப்பில் அதிரடியாக ஆடிய சுனில் நரேன் சதம் (109 ரன்) அடித்து அசத்தினார். ராஜஸ்தான் தரப்பில் அவேஷ் கான், குல்தீப் சென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து 224 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 224 ரன் எடுத்து திரில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் அதிரடியாக ஆடிய பட்லர் சதம் (107 ரன்) அடித்து அசத்தினார். இதையடுத்து அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்த பின் கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த நிலை ஏற்படும் என்று நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை. கிரிக்கெட் உண்மையிலே கணிக்க முடியாத விளையாட்டு தான். ரோவ்மன் பவல் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார். என்ன நடந்தது என்று விவரிக்க மிகவும் கடினமாக இருக்கிறது.
இந்த தோல்வியை ஏற்றுக்கொண்டு அடுத்த போட்டி குறித்து யோசித்துச் செல்ல வேண்டும் என நினைக்கின்றேன். நாங்கள் இந்த போட்டியில் சரியான முறையில் தான் பந்துவீசினோம். கொஞ்சம் தவறினால் கூட பேட்ஸ்மேன்கள் பந்தை மைதானத்திற்கு வெளியே அனுப்பி விடுகிறார்கள். இது போல் ஒரு தோல்வி தொடருக்கு ஆரம்பத்திலே நடந்திருக்கிறது. இதே தோல்வி கடைசி கட்டத்தில் நிகழ்ந்தால் நிச்சயம் ஏமாற்றமாக இருக்கும்.
தற்போது முன்பே நடந்து விட்டதால் எங்கள் அணியில் என்ன பிரச்சனை இருக்கிறது என்று ஆராய்ந்து மீண்டும் பலமாக வருவதற்கு உதவியாக இருக்கும். சுனில் நரேன் எங்கள் அணியின் சொத்தாக இருக்கிறார். அவர் பேட்டிங்கில் காட்டும் திறன் நிச்சயம் எங்கள் அணிக்கு சாதகமாக இருக்கிறது. பட்லர் அடிக்கும் விதத்தை பார்த்துவிட்டு வருண் சக்கரவத்திற்கு ஓவர் கொடுக்கலாம் என்று நினைத்தேன்.
ஆனால் அதையும் அவர் அடித்து நொறுக்கி விட்டார். இந்த தோல்வியை ஜீரணிக்க கொஞ்சம் நேரம் ஆகும் என நினைக்கின்றேன். தற்போது எதையும் பற்றி கவலைப்படாமல் ரிலாக்ஸ் ஆக இருந்து மீண்டும் உத்வேகத்துடன் விளையாட வேண்டும். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் எங்களுக்கு கடினமான போட்டி ஒன்று இருக்கிறது. அதற்கு தயாராக வேண்டும். நமது தவறிலிருந்து பாடம் கற்றுக் கொள்வது தான் முக்கியம். இந்த தோல்வியிலிருந்து நாங்கள் மீண்டும் வருவோம் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.