< Back
கிரிக்கெட்
எனது அதிரடி ஆட்டத்தை மனைவி, குழந்தைக்கு அர்ப்பணிக்கிறேன்..லக்னோ வீரர் நிகோலஸ் பூரன் பேட்டி

image tweeted by @IPL

கிரிக்கெட்

'எனது அதிரடி ஆட்டத்தை மனைவி, குழந்தைக்கு அர்ப்பணிக்கிறேன்..'லக்னோ வீரர் நிகோலஸ் பூரன் பேட்டி

தினத்தந்தி
|
12 April 2023 3:24 AM IST

எனது அதிரடி ஆட்டத்தை மனைவி மற்றும் குழந்தைக்கு அர்ப்பணிக்கிறேன் என்று லக்னோ அணி வீரர் நிகோலஸ் பூரன் தெரிவித்தார்.

பெங்களூரு,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த திரில்லிங்கான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை வீழ்த்தி 3-வது வெற்றியை வசப்படுத்தியது. இதில் முதலில் ஆடிய பெங்களூரு அணி 2 விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்தது. விராட்கோலி (61 ரன்), கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ் (79 ரன்), மேக்ஸ்வெல் (59 ரன்) அரைசதம் விளாசினர்.

தொடர்ந்து ஆடிய லக்னோ அணி கடைசி பந்தில் இலக்கை எட்டிப்பிடித்து வியக்கவைத்தது. 'டாப்-4' வீரர்கள் ஏமாற்றம் அளித்தாலும் மார்கஸ் ஸ்டோனிஸ் (65 ரன், 30 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்), நிகோலஸ் பூரன் (62 ரன், 19 பந்து, 4 பவுண்டரி, 7 சிக்சர்), ஆயுஷ் பதோனி (30 ரன்) ஆகியோர் அதிரடியாக ஆடி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

கேப்டனுக்கு அபராதம்

ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி காண்பது இது 4-வது நிகழ்வாகும். அத்துடன் 20 ஓவர் போட்டிகளில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆட்டத்தில் விரட்டிப்பிடிக்கப்பட்ட அதிபட்ச இலக்கும் (213 ரன்) இது தான். முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களுக்கு மேல் குவித்து பெங்களூரு அணி தோல்வியை சந்திப்பது இது 5-வது முறையாகும்.

இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி பந்து வீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டது. பந்து வீச்சில் தாமதம் செய்ததற்காக பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ்க்கு ரூ.12 லட்சம் அபராதத்தை ஐ.பி.எல். டெக்னிக்கல் கமிட்டி விதித்துள்ளது.

வெற்றிக்கு பிறகு லக்னோ அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் கூறுகையில், 'என்னால் நம்பவே முடியவில்லை. சின்னசாமி ஸ்டேடியத்தில் மட்டும் தான் கடைசி பந்தில் பலமுறை வெற்றிகள் கிடைத்து இருக்கிறது. இக்கட்டான நிலையில் இருந்து நாங்கள் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தது சூப்பர். தொடக்கத்தில் பந்து நன்கு ஸ்விங் ஆனது. பெங்களூரு அணியினர் எங்களது 2-3 விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தி நெருக்கடி அளித்தனர். எங்களது வெற்றிக்கு பின்வரிசை வீரர்கள் பேட்டிங் செய்த விதம் தான் காரணமாகும். என்னுடைய பேட்டிங் திருப்திகரமாக இல்லை. நான் அதிக ரன்கள் எடுக்க வேண்டும், ஸ்டிரைக் ரேட்டை அதிகப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். தொடக்கத்திலேயே நாங்கள் 3 விக்கெட்டுகளை இழந்ததால் எனது ஆட்ட வேகத்தை குறைத்தேன். கடைசி வரை நிலைத்து நின்று நிகோலஸ் பூரனுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். 5-வது, 6-வது, 7-வது பேட்டிங் வரிசையில் விளையாடுவது கடினமானதாகும். அந்த வரிசை தான் ஆட்டத்தின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கக்கூடியதாகும். மார்கஸ் ஸ்டோனிஸ், நிகோலஸ் பூரன் ஆகியோரின் ஆட்ட திறன் எங்களுக்கு தெரியும். ஆயுஷ் பதோனி கடந்த ஆண்டு 2-3 ஆட்டங்களில் சிறப்பாக ஆடினார். அதனை இப்போதும் தொடருகிறார்' என்றார்.

பூரன் உற்சாகம்

15 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டநாயகன் விருதை பெற்ற லக்னோ வீரர் நிகோலஸ் பூரன் (வெஸ்ட் இண்டீஸ்) கூறுகையில், 'இந்த அதிரடி இன்னிங்சை எனது மனைவி மற்றும் சமீபத்தில் பிறந்த குழந்தைக்கு அர்ப்பணிக்கிறேன். ஸ்டோனிஸ்-ராகுல் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஸ்டோனிசின் ரன்வேட்டை எங்களை போட்டியில் நிலைக்க வைத்தது. ஆடுகளம் பேட்டிங்குக்கு நன்றாக இருந்தது. கடைசி கட்டத்தில் எளிதாக இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும். கடந்த சில ஆண்டுகளாக ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் எனக்கு நெருக்கடி இருக்கிறது. கடைசி வரை நிலைத்து நின்று ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இறுதியில் ஆட்டம் இழந்து விட்டேன். இந்த சீசனில் நல்ல உற்சாகமான மனநிலையில் இருக்கிறேன். தொடர்ந்து இதே போல் விளையாடி அணிக்கு வெற்றி தேடித்தர வேண்டும் என்று விரும்புகிறேன்' என்றார்.

மேலும் செய்திகள்