< Back
கிரிக்கெட்
ஐதராபாத் அணிக்கு எதிராக இந்த திட்டத்துடன்தான் பந்து வீசினேன் - தேஷ்பாண்டே

image courtesy: twitter/ @ChennaiIPL

கிரிக்கெட்

ஐதராபாத் அணிக்கு எதிராக இந்த திட்டத்துடன்தான் பந்து வீசினேன் - தேஷ்பாண்டே

தினத்தந்தி
|
29 April 2024 4:48 PM IST

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தேஷ்பாண்டே 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்

சென்னை,

17-வது ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், முன்னாள் சாம்பியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 212 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கெய்க்வாட் 98 ரன்களும், டேரில் மிட்செல் 52 ரன்களும் குவித்தனர். இதனையடுத்து மெகா இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத், சென்னை அணியின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 134 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் சென்னை அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக தேஷ்பாண்டே 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இந்த போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு 3 ஓவர்களில் 27 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்திய தேஷ்பாண்டே முக்கிய பங்காற்றினார். இந்நிலையில் பவர் பிளேவில் ஐதராபாத் அடித்து நொறுக்குவார்கள் என்றும் தெரிந்தும் பொறுமையுடன் செயல்பட்டது பலனை கொடுத்ததாக தேஷ்பாண்டே கூறியுள்ளார். அத்துடன் சரியாக வீசினால் ஒரு பந்தை எதிரணி அடித்தாலும் மற்றொரு பந்தில் கண்டிப்பாக விக்கெட் கிடைக்கும் என்பதே தம்முடைய திட்டமாக இருந்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"பொதுவாக ஐதராபாத் அணி பவர்பிளேவில் ஆக்ரோஷமாக விளையாடுவார்கள். எனவே நாங்கள் பந்து வீச வந்தபோது அவர்களுக்கு எதிராக பொறுமையுடன் இருக்க வேண்டும் என்பதே திட்டமாகும். அது எங்களுக்கு பலனளித்தது. பவர் பிளேவில் அந்த லென்த்தை வீசுவது மிகவும் முக்கியம். ஒருவேளை அந்தப் பந்தில் நான் அடி வாங்கினாலும் மீண்டும் அதே லென்த்தில் என்னை அடிக்குமாறு பேட்ஸ்மேன்களிடம் சவால் விட்டேன். அது எனக்கு இன்று வேலை செய்தது. இன்று மைதானம் மிகவும் ஈரத்துடன் இருந்தது. எனவே சில பந்துகள் ஸ்விங்கானது. அதன் பின் ஸ்விங் கிடைக்கவில்லை. நாங்கள் பிட்ச்சை சரியாக பயன்படுத்தினோம் என்று நினைக்கிறேன். நாங்கள் குறிப்பிட்ட திட்டத்தை வைத்திருந்தோம். அதாவது அவர்கள் ஒரு நல்ல பந்தை அடித்தாலும் நாங்கள் எங்களுடைய திட்டங்களில் கவனம் செலுத்துவோம். அவர்களுடைய அதிரடிக்கு ஈர்க்கப்பட மாட்டோம் என்ற வகையில் பந்து வீசினோம்" எனக் கூறினார்.

மேலும் செய்திகள்