இளம் வீரர்கள் எப்போது என்னிடம் ஆலோசனை கேட்டாலும் உதவ தயாராக இருக்கிறேன் - ஷிகர் தவான்
|அணியில் உள்ள இளம் வீரர்களுடன் எனது அனுபவங்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன் என ஷிகர் தவான் கூறியுள்ளார்.
ஹராரே,
ஜிம்பாப்வேக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் ஷிகர் தவான் பிசிசிஐ இணைய தளத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
அணியில் உள்ள இளம் வீரர்களுடன் எனது அனுபவங்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். இளம் வீரர்கள் எப்போது என்னிடம் ஆலோசனை கேட்டாலும் அவர்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன். ராகுல் மீண்டும் அணிக்கு திரும்பியதுடன், இந்த தொடருக்கு கேப்டனாக செயல்படுவது மிகவும் நல்ல செய்தியாகும்.
இந்திய அணியில் அவர் முக்கியமான வீரர்களில் ஒருவர். ஆசிய கோப்பை போட்டிக்கு முன்பாக அவர் தன்னை தயார்படுத்திக் கொள்ள இந்த போட்டி உதவும். இந்த தொடரின் மூலம் நிச்சயம் அவர் நிறைய பலன் அடைவார் என்று நம்புகிறேன். காயத்தால் வாஷிங்டன் சுந்தர் விலகி இருப்பது வருத்தம் அளிக்கிறது.
எங்கள் அணியில் அவர் முக்கியமான வீரர். ஒரு சுழற்பந்து வீச்சாளராக அவரை தவற விடுகிறோம். ஆனால் காயத்தில் சிக்குவது விளையாட்டின் ஒரு பகுதி. அவருக்கு பதிலாக அணியில் குல்தீப் யாதவ் மற்றும் தீபக் ஹூடா போன்ற சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். சுந்தர் விரைவில் குணமடைந்து திரும்புவார் என்று நம்புகிறேன்.
ஜிம்பாப்வே அணியை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டோம். அவர்கள் வங்கதேசத்திறகு எதிராக சிறப்பாக ஆடியுள்ளனர். மூத்த ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா திறமையான வீரர். அவர் ஜிம்பாப்வே அணிக்காக நீண்ட நாட்களாக விளையாடி வருகிறார். அவரின் விக்கெட்டை வீழ்த்த இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீச வேண்டும் . இளம் இந்திய வீரர்கள் உள்நாட்டு மற்றும் ஐபிஎல் காரணமாக கிடைத்த அனுபவங்களை வைத்து மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.