நாட்டுக்காக விளையாடுவதே எனக்கு பெருமை ஆனால்...உலகக் கோப்பை காயம் குறித்து மனம் திறந்த பாண்ட்யா
|உலகக் கோப்பையில் முழுமையாக பங்கேற்க முடியாதது என்றும் என் இதயத்தில் கனமாக இருக்கும்.
மும்பை,
ஐ.சி.சி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் கடந்த சீசன் இந்தியாவில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. அந்த தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.
இத்தொடரின் போது இந்திய அணியின் ஆல் ரவுண்டார் ஹர்திக் பாண்ட்யா காயமடைந்து பாதியிலேயே வெளியேறினார். அதன்பின் தனது காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த அவர், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடர்களிலிருந்தும் விலகினார்.
இதையடுத்து தற்போது காயத்திலிருந்து மீண்டுள்ள அவர் வரவுள்ள ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கேப்டனாக செயல்படவுள்ளார். இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் கண்டிப்பாக நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன் என ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,
நான் ஐ.சி.சி ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்காக ஓராண்டு காலமாக பயிற்சிகளை மேற்கொண்டு வந்தேன். மேலும் ஒன்றரை ஆண்டு காலமாக எனது தனிப்பட்ட பயிற்சிகளில் கவனத்தை செலுத்தினேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக உலகக்கோப்பை தொடரின்போது எனக்கு காலில் காயம் ஏற்பட்டது. அந்த காயத்தால் என்னால் நடக்கக்கூட முடியவில்லை.
எனினும் உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகும் முடிவில் நான் இல்லை. கண்டிப்பாக நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.அதற்கான நான் அணி நிர்வாகத்திடம் எனக்கு ஒரு ஐந்து நாள் ஓய்வு கொடுங்கள், இந்த காயத்திலிருந்து மீண்டு வந்து விடுகிறேன் என்று கூறினேன். அதற்காக எனது கணுக்காலின் மூன்று இடங்களில் வலி நிவாரனி செலுத்தப்பட்டது.
அதையும் மீறி தான் நான் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்தேன். ஏனெனில் நாட்டுக்காக விளையாடுவது என்னுடைய மிகப்பெரிய பெருமையாகும். நாட்டுக்காக விளையாடுவதை விட பெரிய பெருமை இருக்க முடியாது. ஆனால் அந்த ஐந்து நாளில் நான் எடுத்த முயற்சிகள் எனக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி விட்டது.
நான் ஓய்வு எடுக்காமல் மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டும் என முயற்சி செய்ததால், அந்த ஐந்து நாள் ஓய்வு மூன்று மாத ஓய்வாக மாறிவிட்டது. உலகக் கோப்பையில் முழுமையாக பங்கேற்க முடியாதது என்றும் என் இதயத்தில் கனமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்