'நான் ஒரு இஸ்லாமியன், நான் ஒரு இந்தியன் என பெருமையுடன் கூறுவேன்' - முகமது ஷமி
|பிரார்த்தனை செய்ய அனுமதி கேட்க வேண்டும் என்றால், நான் ஏன் இந்த நாட்டில் இருக்க வேண்டும்? என முகமது ஷமி கேள்வி எழுப்பியுள்ளார்.
மும்பை,
உலகக் கோப்பை குரூப் சுற்றில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனை கொண்டாடும் விதமாக அவர் தரையில் அமர்ந்து கைகளை நீட்டி பிரார்த்தனை செய்யச் சென்றதாகவும், பின் சுதாரித்துக் கொண்டு பின் வாங்கியதாகவும் சமூக வலைதளங்களில் சிலர் பேசி வந்தனர்.
இந்நிலையில் இந்த கருத்துக்களுக்கு இந்திய வீரர் முகமது ஷமி பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது;-
"நான் பிரார்த்தனை செய்ய விரும்பினால், என்னை யார் தடுக்க முடியும்? நான் யாரையும் பிரார்த்தனை செய்வதில் இருந்து தடுக்க மாட்டேன். நான் பிரார்த்தனை செய்ய விரும்பினால், அதைச் செய்வேன். இதில் என்ன பிரச்சினை?
நான் ஒரு இஸ்லாமியன் என்பதை பெருமையுடன் கூறுவேன். நான் ஒரு இந்தியன் என்பதை பெருமையுடன் சொல்வேன். அதில் என்ன பிரச்சினை? நான் யாரிடமாவது பிரார்த்தனை செய்ய அனுமதி கேட்க வேண்டும் என்றால், நான் ஏன் இந்த நாட்டில் இருக்க வேண்டும்?
இதற்கு முன்பு 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு நான் எப்போதாவது பிரார்த்தனை செய்திருக்கிறேனா? நான் பலமுறை ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ளேன். நீங்கள் எங்கு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள், நான் அங்கு சென்று பிரார்த்தனை செய்கிறேன்."
இவ்வாறு முகமது ஷமி தெரிவித்துள்ளார்.