< Back
கிரிக்கெட்
அஸ்வின் பந்துவீச்சை எதிர்கொள்வது எப்படி? இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு பீட்டர்சன் ஆலோசனை
கிரிக்கெட்

அஸ்வின் பந்துவீச்சை எதிர்கொள்வது எப்படி? இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு பீட்டர்சன் ஆலோசனை

தினத்தந்தி
|
21 Jan 2024 8:35 AM IST

இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 25-ம் தேதி தொடங்க உள்ளது.

லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 25-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கடைசியாக இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் இங்கிலாந்துக்கு எதிராக மட்டுமே தோல்வியடைந்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற அந்த டெஸ்ட் தொடருக்கு பின் சொந்த மண்ணில் இங்கிலாந்து உட்பட உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தோற்காத இந்தியா தொடர்ச்சியாக வெற்றி நடை போட்டு வருகிறது.

மறுபுறம் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20போல அதிரடியாக விளையாடி இங்கிலாந்து தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது. எனவே 2012-ல் நடந்ததுபோல் இம்முறையும் இந்தியாவில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இங்கிலாந்து இத்தொடரில் விளையாட உள்ளது.

2012-ல் நடைபெற்ற அந்த தொடரில் இங்கிலாந்து வெற்றி பெறுவதற்கு பேட்டிங் துறையில் குக் மற்றும் கெவின் பீட்டர்சன் சிறப்பாக செயல்பட்டனர். இந்நிலையில் அத்தொடரில் அஸ்வினுக்கு எதிராக அசத்தியத்தை பற்றி நினைவு கூர்ந்துள்ள கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு சில ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;- "எங்களுடைய காலத்தில் இந்தியாவில் நாங்கள் நிதானமாக விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்தோம். அதேபோல் 2016-ல் நடைபெற்ற தொடரில் ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஜோ ரூட் அவ்வாறு விளையாடினார்கள். மேலும் வலைப்பயிற்சியில் தடுப்பாட்டத்தை கற்றுக்கொள்வதற்காக நான் அதிக நேரத்தை செலவிட்டேன். அது எதிர்மறையான தடுப்பாட்டம் அல்ல. மாறாக அது தற்காத்துக் கொள்ளும் திறன் மற்றும் பதிலுக்கு தாக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்தது.

நான் அப்போது அஸ்வினின் தூஸ்ரா வகை பந்துகளை தேர்வு செய்து அடித்தேன். அவர் தூஸ்ரா வீசப் போகிறார் என்றால் பந்து வீச ஓடி வரும் முன்பே தூஸ்ரா வீசுவதற்கு ஏற்ற வகையில் தன் கையில் பந்தை பிடித்துக் கொள்வார். அவர் இப்போதும் அப்படித்தான் செய்கிறார் என்று நினைக்கிறேன். அவர் மற்ற ஆப் ஸ்பின்னர்கள்போல ஓடி வரும்போது தூஸ்ரா வீசுவதற்காக பந்தை பிடிப்பதில்லை. அவர் ஓடி வரும் முன்பே பந்தை கைகளில் தூஸ்ரா வீசும் வகையில் பிடித்து விடுவார்.

அஸ்வின் பந்து வீசும்போது நான் 100 சதவீதம் உறுதியாக இருப்பேன். நான் அவரை எத்தனை முறை ஆப் சைடில் அடித்து இருப்பேன் என்பதை நீங்கள் கவனித்து இருக்கலாம். அஸ்வின் தூஸ்ரா வீசப் போகிறார் என்பதை நான் அவர் பந்து வீச தயார் ஆகும் போதே கவனித்து விடுவேன். ஏனெனில், அவர் அப்போது லெக் திசையில் பீல்டிங்கை பலமாக நிற்க வைப்பார். பந்து திரும்பும் என்பதால் அப்படி செய்வார். நான் அதைப் பார்த்து கண்டுபிடித்து, போர் அல்லது சிக்ஸ் அடிக்க வேண்டும் என நினைத்துக் கொள்வேன்'என்று கூறினார்.

மேலும் செய்திகள்