விராட் மற்றும் ரோகித் இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார்கள்? ஹர்பஜன் கணிப்பு
|விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர்.
மும்பை,
இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர். கடந்த 10 வருடங்களாக இந்திய அணியின் வெற்றிகளில் பங்காற்றிய அவர்கள் டி20 உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றனர். அந்த வெற்றியுடன் இளம் தலைமுறை வீரர்களுக்கு வழிவிடும் வகையில் ஓய்வு பெறுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
அதே சமயம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து இந்தியாவுக்கு விளையாடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக 2025 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் அவர்கள் விளையாடுவார்கள் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.
இந்நிலையில் விராட் கோலியால் 5 வருடங்கள் விளையாட முடியும் என தெரிவிக்கும் ஹர்பஜன் கேப்டன் ரோகித் சர்மா மேற்கொண்டு 2 ஆண்டுகள் விளையாடக்கூடும் என்று கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ரோகித் இன்னும் 2 வருடங்கள் விளையாடலாம். விராட் கோலி தனது பிட்னஸ் காரணமாக 5 வருடங்கள் விளையாடுவதை பார்க்க முடியும். விராட் மற்றும் ரோகித் ஆகியோரிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் இருப்பதாக நான் கருதுகிறேன். எனவே நன்றாக விளையாடி அணி வெல்லும் வரை அவர்கள் தொடர்ந்து விளையாடலாம். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாக விளையாட வேண்டும். பொதுவாகவே கிரிக்கெட்டில் நீங்கள் இளம் வீரர்களை வளர்ப்பதற்கு அனுபவ வீரர்கள் தேவை. அதே சமயம் யாராவது சிறப்பாக செயல்படவில்லை என்றால் அவரை ஜூனியர் அல்லது சீனியர் என்று பாகுபாடு பார்க்காமல் தேர்வாளர்கள் நீக்க வேண்டும்.
ஒருவேளை அவர்கள் பிட்டாக இல்லாமல் ரன்கள் குறைவாக அடித்தால் அவர்களின் நேரம் வந்ததாக அர்த்தம். அப்போது அவர்கள் அடுத்த தலைமுறைக்கு வழிவிட வேண்டும். நாளின் இறுதியில் ஓய்வு என்பது அவர்களுடைய விருப்பம். மறுபுறம் சீனியர்களை விட ஜூனியர் வீரர்களுக்குத்தான் வெற்றிக்கான தாகம் அதிகமாக இருக்கும். ஏனெனில் 15 வருடங்கள் விளையாடி முடித்த சீனியர்களிடம் தாகம் குறைந்திருக்கும். அது போன்ற சூழ்நிலையில் ஜெய்ஸ்வால், ரியான் பராக், கில் அசத்துவதை பார்ப்பது நன்றாக இருக்கிறது" என்று கூறினார்.