கடைசி கட்டத்தில் ஹூடா அதிரடி...இந்தியா 162 ரன் சேர்ப்பு...!
|இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.
மும்பை,
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டயா அணியை வழிநடத்த உள்ளார். இந்நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனகா பந்துவீசுவதாக அறிவித்தார்.
இந்திய அணியில் சுப்மன் கில் மற்றும் ஷிவம் மாவி ஆகியோர் டி20 அணியில் அறிமுக வீரர்களாக களம் இறக்கப்பட்டனர். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இளம் வீரர்கள் கிஷன் மற்றும் கில் ஆகியோர் களம் இறங்கினர். அதிரடியாக இன்னிங்சை தொடங்கிய கசுன் ரஜிதா வீசிய முதல் ஓவரில் 17 ரன்கள் குவித்தனர். இந்நிலையில் ஆட்டத்தின் 3வது ஓவரை வீசிய மகேஷ் தீக்சனா சுப்மன் கில்லை எல்பிடபிள்யூ முறையில் வீழ்த்தினார்.
டிஆர்எஸ் முறையில் அப்பீல் செய்தும் பலன் இல்லை. இதையடுத்து களம் புகுந்த துணை கேப்டன் சூர்யகுமார் யாதவ் 7 ரன்னில் ஆட்டம் இழந்தார். பவர் பிளே முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் அடித்திருந்தது. 3வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய சஞ்சு சாம்சன் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த தவறினார். அவர் 5 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து அணியின் கேப்டன் பாண்ட்யா இஷன் கிஷனுடன் ஜோடி சேர்ந்தார்.
இந்நிலையில் அதிரடியாக ஆடி வந்த இஷன் கிஷன் 37 ரன்னில் ஹசரங்கா பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து தீபக் ஹூடா பாண்ட்யாவுடன் ஜோடி சேர்ந்தார். நிதானமாக ஆடி வந்த பாண்ட்யா 27 பந்தில் 29 ரன்னுக்கு அவுட் ஆனார். இதையடுத்து அக்சர் பட்டேல் களம் இறங்கினார்.
இறுதி கட்டத்தில் தீபக் ஹூடா அதிரடி காட்டி சிக்சர்களை பறக்கவிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் அடித்தது. இந்திய அணி தரப்பில் இஷன் கிஷன் 37 ரன்னும், தீபக் ஹூடா 41 ரன்னும், அக்சர் பட்டேல் 31 ரன்னும் அடித்தனர்.
இலங்கை அணி தரப்பில் ஹசரங்கா, தீக்சனா, டி சில்வா, கருணாரத்னே, மதுஷான்கா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி ஆட உள்ளது.