தோனி போலவே சிக்சர் அடித்து அந்த பந்தை... வைரலாகும் குட்டி பெண் ரசிகை வீடியோ
|மும்பைக்கு எதிரான ஆட்டத்தின்போது பெவிலியன் நோக்கி சென்ற தோனி மாடி படிக்கட்டில் கிடந்த பந்து ஒன்றை ஒரு குட்டி பெண் ரசிகையிடம் கொடுத்தார்.
மும்பை,
நடப்பு ஐ.பி.எல். சீசனில் சென்னை அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்த எம்.எஸ்.தோனி சாதாரண விக்கெட் கீப்பராக விளையாட வருகிறார். இருப்பினும் அவரை பார்ப்பதற்கு ஒவ்வொரு போட்டியிலும் ஏராளமான ரசிகர்கள் மைதானத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.
முன்னதாக கடந்த 14-ம் தேதி நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியின்போது பேட்டிங் செய்ய களமிறங்கிய தோனி கடைசி 4 பந்துகளை மட்டும் எதிர்கொள்ளும் வாய்ப்பை பெற்றார். அதில் 6, 6, 6 என ஹாட்ரிக் சிக்சர்களை பறக்க விட்ட அவர் 20 (4 பந்துகளில்) ரன்களை 500 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து மாஸ் பினிஷிங் கொடுத்தார்.
அப்படி அதிரடியாக விளையாடி முடித்ததும் நேரடியாக பெவிலியன் நோக்கி வேகமாக சென்ற தோனி மாடி படிக்கட்டில் பந்து ஒன்று கிடப்பதை பார்த்தார். அதை கையில் எடுத்த தோனி அப்படியே அருகில் நீல நிற ஜெர்சியை அணிந்து நின்று கொண்டிருந்த ஒரு குட்டி பெண் ரசிகையிடம் அந்த பந்தை கொடுத்து விட்டு சென்றது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது.
இந்நிலையில் மெஹர் எனும் அந்த சிறிய பெண் குழந்தை வருங்காலத்தில் தாமும் இந்தியாவுக்காக விளையாட உள்ளதாக கூறியுள்ளார். அப்போது தோனிபோலவே சிக்சர் அடித்து அந்த பந்தை தம்மை போன்ற இளம் ரசிகருக்கு கொடுப்பேன் என்றும் மெஹர் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "என் பெயர் மெஹர். எனக்கு தோனி அங்கிள் இந்த பந்தை கொடுத்தார். நானும் ஒருநாள் இந்தியாவுக்காக விளையாடி எனது கனவை நிஜமாக்கி இந்த பந்தை தம்மை போன்ற ஒருவருக்கு கொடுப்பேன்" என்று கூறினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.