பும்ராவுக்கு எதிராக ஸ்வீப் ஷாட் அடிப்பது என்னுடைய கனவு - அசுதோஷ் சர்மா பேட்டி
|ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
சண்டிகர்,
10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசனின் 33-வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 192 ரன்களை குவித்தது. மும்பை அணி சார்பாக அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 78 ரன்களையும், ரோகித் சர்மா 36 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பின்னர் 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் காரணமாக மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
பஞ்சாப் வெற்றிக்காக இறுதிகட்டத்தில் போராடிய அசுதோஷ் சர்மா 28 பந்தில் 61 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இந்நிலையில் இந்த ஆட்டம் முடிந்த பின் பஞ்சாப் வீரர் அசுதோஷ் சர்மா அளித்த பேட்டியில் பும்ராவுக்கு எதிராக ஸ்வீப் ஷாட் அடிப்பது தம்முடைய கனவு என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
நீ காட்டுத்தனமாக அடிப்பவன் கிடையாது. உன்னால் சரியான ஷாட்டுகளை அடிக்க முடியும் என்பதால் அதில் கவனம் செலுத்து என்று சஞ்சய் சார் என்னிடம் சொன்னார். அந்த சிறிய வார்த்தை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நான் அதையே பின்பற்றி வருகிறேன். நான் அதிரடியான ஹிட்டர் கிடையாது. வீட்டில் என்னுடைய பயிற்சியாளர் அமித் குரசியாவுடன் சேர்ந்து பயிற்சி செய்வேன்.
அவரும் நீ களத்தில் நீண்ட நேரம் இருக்கும் வரை உனது அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியுள்ளார். ஆம் 2 போட்டிகளில் நான் பினிஷிங் செய்யவில்லை. ஆனால் அது தான் கிரிக்கெட். அதில் நீங்கள் தொடர்ந்து முன்னேற்றம் காண வேண்டும். பும்ராவுக்கு எதிராக ஸ்வீப் அடிப்பது என்னுடைய கனவாகும். அதற்காக நான் பயிற்சிகளை செய்தேன். தற்போது அது உலகின் சிறந்த பவுலருக்கு எதிராக வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.