அவர் வீசிய ஒரு ஓவர் எங்களை இந்த போட்டியில் இருந்து பின்னுக்கு தள்ளியது - டு பிளெஸ்சிஸ் பேட்டி
|ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூருவை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா திரில் வெற்றி பெற்றது.
கொல்கத்தா,
ஐ.பி.எல் தொடரில் நேற்று மாலை கொல்கத்தாவில் நடைபெற்ற 36வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் குவித்தது. கொல்கத்தா தரப்பில் ஸ்ரேயாஸ் ஐயர் 50 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய பெங்களூரு அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா திரில் வெற்றி பெற்றது.
பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக வில் ஜேக்ஸ் 55 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் ரசல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த தோல்வியின் மூலம் பெங்களூரு அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது எனலாம்.
இதையடுத்து இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்த பின் பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது, விதிமுறைகள் எப்போதுமே அனைவருக்கும் பொதுவானது தான். ஆனால் விராட் கோலிக்கும், எனக்கும் அந்த பந்து மேலே சென்றதாக தான் தெரிந்தது. ஆனாலும் கிரீசின் கணக்கின் அடிப்படையில் விராட் கோலி ஆட்டம் இழந்ததாக அம்பயர்கள் முடிவு செய்தனர். அதன் பின்னர் வில் ஜேக்ஸ் மற்றும் பட்டிதார் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி மீண்டும் எங்களை ஆட்டத்திற்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும் சுனில் நரேன் வீசிய ஒரு ஓவர் எங்களை இந்த போட்டியில் இருந்து பின்னுக்கு தள்ளியது. ஒரே ஓவரில் அவர் இரண்டு விக்கெட்டுகளை எடுக்க அந்த ஓவர் தான் எங்களுக்கு பின்னடைவை தந்தது. ஒரே ஓவரில் அவர் மொத்த ஆட்டத்தையும் மாற்றிவிட்டார்.
சிறிய சிறிய விசயங்களில் தவறுகள் இருந்தாலும் இந்த போட்டியில் எங்களது அணியின் வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டதாகவே உணர்கிறேன். இந்த போட்டியில் எங்களுடைய முழு உழைப்பையும் அளித்து நாங்கள் தோல்வியை சந்தித்துள்ளோம். இருந்தாலும் இனிவரும் போட்டிகளில் வெற்றிகரமாக இந்த தொடரை முடிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.