இறுதிப்போட்டியில் என்னை மேல் வரிசையில் பேட்டிங் செய்ய வைத்தது அவரது முடிவு - அக்சர் படேல்
|டி20 உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
பார்படாஸ்,
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வந்த டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிபோட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 176 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 177 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 7 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்த ஆட்டத்தில் இந்தியா பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ஒரு கட்டத்தில் 34/3 என ஆரம்பத்திலேயே தடுமாறியதால் ரசிகர்கள் கவலையடைத்தனர். இதையடுத்து 4வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த அக்சர் படேல் 31 பந்துகளில் 47 ரன்கள் விளாசினார்.
இந்நிலையில் இறுதிப்போட்டியில் 3 விக்கெட்டுகள் விழுந்ததும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தான் திடீரென தம்மை பேட்டிங் செய்ய செல்லுமாறு சொன்னதாக அக்சர் படேல் கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, இறுதிப்போட்டியில் மேல் வரிசையில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.
வழக்கம் போல எப்படியும் கீழ் வரிசையில் தான் பேட்டிங் செய்வோம் என்று பெவிலியனில் அமர்ந்திருந்தேன். ஆனால் ஆரம்பத்திலேயே நாங்கள் 3 விக்கெட்டுகள் இழந்ததும் ராகுல் பாய் என்னிடம் "அக்சர், உபகரணங்களை அணிந்து கொள்" என்றார். அப்போது எனது பேட்டிங்கைப் பற்றி சிந்திக்க கூட எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆனால், அது எனக்கு வேலை செய்தது. இவ்வாறு அவர் கூறினார்.