< Back
கிரிக்கெட்
ரோகித் சர்மா கொடுத்த அந்த  அட்வைஸ்தான் பெரிதும் உதவியது: ஜெய்ஸ்வால் நெகிழ்ச்சி

image courtesy; AFP

கிரிக்கெட்

ரோகித் சர்மா கொடுத்த அந்த அட்வைஸ்தான் பெரிதும் உதவியது: ஜெய்ஸ்வால் நெகிழ்ச்சி

தினத்தந்தி
|
5 Jan 2024 5:08 PM IST

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வாலுக்கு சரியாக அமையவில்லை.

கேப்டவுன்,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அதில் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் 1-1 என சமனில் முடிவடைந்த நிலையில், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பமானது.

அதபடி இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நேற்று முன்தினம் தொடங்கியது. வெறும் 2 நாளிலேயே முடிவடைந்த இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.

இந்த டெஸ்ட் தொடர் இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வாலுக்கு சரியாக அமையவில்லை. 4 இன்னிங்சிலும் சேர்த்து வெறும் 50 ரன்கள் மட்டுமே அடித்தார். ஆனால் கடைசி டெஸ்ட் போட்டியில் 79 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தும்போது அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் 28 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கொடுத்த அந்த அட்வைஸ்தான் அவருக்கு பெரிதும் உதவியது என்று ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "தென் ஆப்பிரிக்கா தொடர் சவாலானது என்பதை ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ரோகித் சர்மா கொடுத்த அந்த அட்வைஸ்தான் எனக்கு பெரிதும் உதவியது. ரோகித் என்னிடம் புதிய பந்திற்கு எதிராக விளையாடும்போது விரைவாக ரன்களை எடுக்க முயற்சிக்க வேண்டும் என்று கூறினார். அதைத்தான் இந்த கடைசி போட்டியில் செய்தேன். நான் ஒரு நல்ல தொடக்கத்தை கொடுக்க விரும்பினேன். நாங்கள் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று என் மனதில் இருந்தது. .

இந்த சுற்றுப்பயணம் எனக்கு ஒரு கற்றல் அனுபவமாக உள்ளது. மாறுபட்ட சூழல் மற்றும் எல்லா வகையிலும் இது ஒரு சுவாரஸ்ய அனுபவமாக உள்ளது. நான் செய்ய வேண்டிய மேம்பாடுகளைப் பற்றி கற்றுக்கொண்டேன். பந்து இங்கே வித்தியாசமாக வருகிறது. நான் என்னால் முடிந்த அனைத்தையும் கொடுக்க முயற்சித்தேன். ஆனால் சவால்கள் இருந்ததை நான் ஏற்றுக்கொள்கிறேன். இந்த அனுபவம் என்னை நல்ல நிலையில் வைத்திருக்கும். மேலும் நான் கற்றுக்கொண்டிருப்பதால் அடுத்த தொடரின்போது என்னை மேம்படுத்த முயற்சிப்பேன்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்