அதிர்ஷ்டத்தால் மட்டுமே இவர் இந்திய அணியில் உள்ளார் - டாம் மூடி யாரை கூறுகிறார்...?
|ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர்) வரும் 30ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது.
மெல்போர்ன்,
ஆசிய கோப்பை தொடர் வரும் 30ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொள்கிறது. இந்த தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணியில் கில், கோலி, ஸ்ரேய்ஸ் அய்யர், கே.எல்.ராகுல், பாண்ட்யா, ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பும்ரா, இஷான் கிஷன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல், முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா உள்ளிட்டோரும் சஞ்சு சாம்சன் மாற்று வீரராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் இடம் பிடித்துள்ளது அதிர்ஷ்டத்தினால் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டாம் மூடி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் அதிர்ஷ்டம் இருப்பதாக நான் நினைக்கும் வீரர் சூர்யகுமார் யாதவ். அவரது விளையாட்டை நாம் அனைவரும் பார்க்க விரும்புபவர்கள் என்பது எனக்குத் தெரியும், ஆனால் அவர் இன்னும் 50 ஓவர் ஆட்டத்திற்கு தயாராகவில்லை.அவர் இப்போது 20 போட்டிகளுக்கு மேல் விளையாடியும் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி உள்ளார்.
என்னை பொறுத்தவரை இன்னும் சிறப்பான தேர்வுகள் இருந்தன. ஜெய்ஸ்வால் போன்ற ஒரு இளம் வீரரை அந்தப் பக்கத்தில் பார்த்திருப்பேன். அல்லது அந்த இடத்தில் ஒரு லெக் ஸ்பின்னரை சேர்த்திருப்பேன். அந்த வீரர் யார் என்று உங்களுக்கு தெரியும்.
டி20 கிரிக்கெட்டில் அவர் ஒரு மேதை. ஆனால் 50 ஓவர் கிரிக்கெட் முற்றிலும் மாறுபட்ட வடிவம், அதற்கு அவர் இன்னும் தயாராகவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.