'புஜாரா இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பார்' - தந்தை நம்பிக்கை
|புஜாரா இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பார் என்று புஜாராவின் தந்தையும், பயிற்சியாளருமான அர்விந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
வெஸ்ட்இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இருந்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் புஜாரா அதிரடியாக நீக்கப்பட்டார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் எதிர்பார்த்தபடி சோபிக்காததால் கழற்றி விடப்பட்டுள்ள அவரது எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. 103 டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்கும் புஜாரா தனது பார்மை மீட்டெடுக்க துலீப் கோப்பை போட்டியில் விளையாட திட்டமிட்டுள்ளார். அத்துடன் கவுண்டி போட்டியிலும் களம் இறங்க முடிவு செய்து இருக்கிறார். அணியில் இருந்து நீக்கப்பட்ட மறுநாளான நேற்று புஜாரா பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் புஜாராவின் தந்தையும், பயிற்சியாளருமான அர்விந்த் அளித்த ஒரு பேட்டியில், 'புஜாரா மனரீதியாக மிகவும் வலுவானவர். அணி தேர்வு குறித்து நான் கருத்து சொல்லமாட்டேன். ஆனால் நான் பார்த்ததில் அவர் சிறப்பான முறையில் பேட்டிங் செய்கிறார். உண்மையை சொல்லப்போனால் வெஸ்ட்இண்டீஸ் பயணத்துக்கான அணி அறிவிக்கப்பட்ட பிறகு அதேநாளில் அவர் கடுமையாக வலைப்பயிற்சி மேற்கொண்டார். அவர் துலீப் கோப்பை போட்டிக்கு தயாராகுவதற்கு பயிற்சியை தொடங்கி விட்டார். கவுண்டி போட்டியிலும் தொடர்ந்து விளையாடுவார். அவரால் இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப முடியும் என்று ஒரு தந்தையாகவும், பயிற்சியாளராகவும் நான் நம்புகிறேன்' என்று தெரிவித்தார்.