20 ஓவர் உலகக்கோப்பை: தீபக் சஹாரை சேர்ப்பது இந்திய அணிக்கு பலன் கொடுக்கும்- சுனில் கவாஸ்கர்
|உலகக் கோப்பைக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை,
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தொடர்ச்சியாக பெற்ற தோல்விகளால் ஆசிய கோப்பையில் இருந்து வெளியேறியது. இதனையடுத்து வரும் அக்டோபரில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடுவதில் இந்திய அணி கவனம் செலுத்தி வருகிறது.
7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன.
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இந்த போட்டிக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தீபக் சஹார் இடம்பெற வேண்டும் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
தீபக் சஹார் குறித்து கவாஸ்கர் கூறுகையில், ஆஸ்திரேலியா போன்ற களத்தில் கூடுதல் பவுன்ஸ் இருக்கும். அப்போது பவர் ப்ளே ஓவ்ர்களில் புதிய பந்தில் விக்கெட் எடுக்கக்கூடிய வீரராக தீபக் சஹார் தேவை.
ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றால் 4 -5 வேகப்பந்துவீச்சாளர்கள் வரை அழைத்து செல்ல வேண்டும். அதில் தீபக் சஹார் மிக முக்கியமாக தேவை. எனவே வரும் டி20 உலகக்கோப்பையில் தீபக் சஹாரை சேர்ப்பது இந்திய அணிக்கு பெரிய பலனை கொடுக்கும் என கவாஸ்கர் கூறியுள்ளார்.