ஹெட், அபிஷேக் அதிரடி...லக்னோவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றி
|ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஐதராபாத்,
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக பதோனி 55 ரன்கள் எடுத்தார். ஐதராபாத் தரப்பில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா களமிறங்கினர். இருவரும் லக்னோ பந்து வீச்சை எந்த வித சிரமமின்றி எதிர்கொண்டு அதிரடியில் வெளுத்து வாங்கினர்.
அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 16 பந்துகளில் அரைசதம் அடித்தார். சிறிது நேரத்திலேயே அபிஷேக் சர்மா 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரின் விக்கெட்டையும் வீழ்த்த லக்னோ அணி எடுத்த எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.
முடிவில் வெறும் 9.4 ஓவர்களிலேயே 167 ரன்கள் அடித்து ஐதராபாத் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 89 ரன்களும், அபிஷேக் சர்மா 75 ரன்களும் அடித்தனர்.