< Back
கிரிக்கெட்
அடுத்த ஒருநாள் உலகக்கோப்பைக்கு பின் அவர்தான் இந்திய அணியின் கேப்டன் - முன்னாள் பயிற்சியாளர் பேட்டி
கிரிக்கெட்

அடுத்த ஒருநாள் உலகக்கோப்பைக்கு பின் அவர்தான் இந்திய அணியின் கேப்டன் - முன்னாள் பயிற்சியாளர் பேட்டி

தினத்தந்தி
|
6 Aug 2024 1:03 AM GMT

டி20 கிரிக்கெட்டில் விராட், ரோகித் இடத்தை கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் இப்போதே நிரப்பத் தொடங்கி விட்டதாக ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஜடேஜா ஆகியோர் டி20 உலகக்கோப்பையை வென்றதையடுத்து சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றனர். வருங்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். அதே சமயம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் இடத்தை நிரப்பும் திறமை தமிழக வீரர் சாய் சுதர்சன், ஜெய்ஸ்வால், அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில்லிடம் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். குறிப்பாக கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் விராட், ரோகித் இடத்தை இப்போதே நிரப்பத் தொடங்கி விட்டதாக தெரிவிக்கும் ஸ்ரீதர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வால், கில் ஆகிய இருவருமே அசத்தினார்கள். அந்த இருவருமே டெஸ்ட் மற்றும் டி20 அணிகளில் தங்களுடைய இடத்தை பிடித்துள்ளனர். என்னைப் பொறுத்த வரை சுப்மன் கில் ஆல் பார்மட் பிளேயர். அவர் தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியில் ரோகித் சர்மாவின் துணை கேப்டனாக செயல்பட உள்ளார். 2027 உலகக்கோப்பைக்கு பின் அவர் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவின் கேப்டனாக இருப்பதையும் பார்க்கலாம்.

ஆனால் ஜெய்ஸ்வாலுக்கு நிறைய போட்டி இருக்கிறது. குறிப்பாக அபிஷேக் ஷர்மா மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் அவருக்கு போட்டியைக் கொடுக்கின்றனர். ஆனால் கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வால் சதமும் இரட்டை சதமும் அடித்ததை நாம் பார்த்தோம். எனவே பெரிய இன்னிங்ஸ் விளையாடும் திறமை அவரிடம் இருக்கிறது. அதே போல ஜெய்ஸ்வால் டி20 கிரிக்கெட்டில் ஐபிஎல் தொடரிலும் சமீபத்திய ஜிம்பாப்வே தொடரிலும் அசத்தினார். ஆனாலும் அபிஷேக் சர்மா, சாய் சுதர்சன் ஆகியோர் அவரைச் சுற்றி 2 தரமான தொடக்க வீரர்களாக உள்ளனர். எனவே அவர்களின் வாய்ப்பு பார்மை பொறுத்து அமையும். ஆனால் சுப்மன் கில் இந்தியாவின் முன்னணி வீரராக இருப்பார்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்