அவர் ரோகித் மற்றும் விராட் கோலி போல வளர்ந்திருக்க வேண்டியவர் - இந்திய முன்னாள் வீரர்
|கே.எல். ராகுல் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா போல வந்திருக்க வேண்டியவர் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான கே.எல்.ராகுல் தற்போது துலீப் கோப்பை தொடரில் விளையாட தயாராகி வருகிறார். இந்திய அணிக்கு அறிமுகம் ஆன ஆரம்ப காலங்களில் சிறப்பாக விளையாடி அணியின் துணை கேப்டனாக முன்னேறினார்.
ஆனால் சமீப காலங்களில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் அவர் அணியின் தோல்விகளுக்கு காரணமாகி வருகிறார். இதனால் தற்போது 3 வகையான இந்திய அணியிலும் கே.எல். ராகுலுக்கு நிலையான இடம் பறிபோயுள்ளது.
இந்நிலையில் கே.எல். ராகுல் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா போல வளர்ந்திருக்க வேண்டியவர் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ஏமாற்றத்தை தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்பு பெற ராகுல் பெரிய ரன்கள் அடித்து நன்றாக விளையாட வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-
"தனிப்பட்ட முறையில் கே.எல். ராகுலை ஒரு வீரராக எனக்குப் பிடிக்கும். அவர் ரன்கள் அடித்தால் தொடர்ந்து முன்னோக்கிச் செல்வார். அவர் எப்போதுமே ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் நிழல் போல இருந்தவர். அந்த மூவருமே பெரிய வீரர்கள். ராகுல் சூப்பரான திறமை கொண்டவர் என்று நான் கருதுகிறேன். வருங்காலத்தில் ரன்கள் அடிக்கும் வரை அவர் இந்திய அணியில் விளையாடுவார்.
இந்திய அணியும் அவரை உயர்வாகவே கருதுகிறது. ஆனால் அவருக்கு போட்டியாக நிறைய வீரர்கள் வந்துள்ளனர். அதனால் இனிமேலும் அவருக்கு பழைய மதிப்புடன் வாய்ப்புகள் கிடைக்காது. அதே சமயம் அவர் கடினமான சூழ்நிலைகளில் நிறைய ரன்கள் அடித்துள்ளார் என்பதை நான் சொல்வேன்" என்று கூறினார்.