நேற்றைய ஆட்டத்தில் கில்லுக்கு பதிலாக இவருக்கு ஆட்டநாயகன் விருது கொடுத்திருக்க வேண்டும் - இர்பான் பதான்
|குஜராத் தரப்பில் சுப்மன் கில் 104 ரன்னும், சாய் சுதர்சன் 103 ரன்னும் எடுத்தனர்.
அகமதாபாத்,
ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 231 ரன்கள் குவித்தது.
குஜராத் தரப்பில் சுப்மன் கில் 104 ரன்னும், சாய் சுதர்சன் 103 ரன்னும் எடுத்தனர். சென்னை தரப்பில் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 232 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் குஜராத் அணி 35 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் 63 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் மொகித் ஷர்மா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் சதம் அடித்து அசத்திய சுப்மன் கில்லுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் சுப்மன் கில்லுக்கு பதிலாக மொகித் ஷர்மாவுக்கு தான் ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் தனது கருத்தை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, என்னை பொறுத்தவரையில் மொகித் ஷர்மாதான் நேற்றைய ஆட்ட நாயகனாக இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் அது பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஒரு தட்டையான ஆடுகளம்.
அது ஹை ஸ்கோரிங் போட்டியாக அமைந்தது. தோல்வி அடைந்த அணியும் 200 ரன்களை நெருங்கியது. அதில் மொகித் ஷர்மா மட்டும்தான் பந்து வீச்சில் பல மாற்றங்கள் செய்து வீசினார். மேலும் முக்கியமான மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். டேரில் மிட்சல் மற்றும் மொயின் அலி இருவரும் செட் ஆகி இருந்தார்கள்.
இந்த இரண்டு பேட்டர்களில் யாராவது ஒருவர் நின்று இருந்தால் போட்டியை முடித்து இருப்பார்கள். இல்லை போட்டி இன்னும் நெருங்கி வந்திருக்கும். இதை வைத்துப் பார்க்கையில் மொகித் ஷர்மா மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். மேலும் அவருடைய பழைய பார்ம்மில் திரும்பி வந்திருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.