ஐ.பி.எல் தொடரில் நான் சந்தித்ததில் மிகவும் கடினமான பவுலர் இவர் தான் - அபிஷேக் சர்மா
|ஐ.பி.எல் தொடரில் நான் சந்தித்ததில் மிகவும் கடினமான பவுலர் குறித்து அபிஷேக் சர்மா பேசியுள்ளார்.
அகமதாபாத்,
10 அணிகள் கலந்து கொண்ட 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் கடந்த 19-ம் தேதியுடன் நிறைவடைந்தன. லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.
பிளே ஆப் சுற்றில் இன்று நடைபெறும் முதலாவது குவாலிபையர் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன. இதே மைதானத்தில் நாளை நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
நடப்பு ஐ.பி.எல் தொடரில் ஐதராபாத் அணிக்கு துவக்க ஆட்டக்காரராக விளையாடும் இந்திய இளம் இடதுகை வீரர் அபிஷேக் ஷர்மா அனைவரது கவனத்தையும் கவர்ந்து இருக்கிறார். அபிஷேக் ஷர்மா நடப்பு ஐ.பி.எல் தொடரில் 13 போட்டிகளில் 467 ரன்கள் குவித்திருக்கிறார்.
இந்த நிலையில் இந்த ஐ.பி.எல் தொடரில் தான் சந்தித்ததில் மிகவும் கடினமான பந்துவீச்சாளர் யார் என்று அபிஷேக் சர்மா கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, பும்ரா மிகச் சிறப்பாக பந்து வீசுகிறார். அவருக்கு மற்றவர்களை விட கொஞ்சம் கூடுதல் பவுன்ஸ் இருக்கிறது.
மேலும் அவர் சிறந்த யார்க்கரை வீசுகிறார். மேலும் அவர் அடுத்து என்ன மாதிரியான பந்து வீசப் போகிறார் என்பது குறித்து பேட்ஸ்மேன்கள் கணிப்பது மிகவும் கடினம். எனவே பும்ரா தான் இந்த ஐ.பி.எல் தொடரில் நான் சந்தித்ததில் மிகவும் கடினமான பந்துவீச்சாளர். இவ்வாறு அவர் கூறினார்.