அவர் லக்னோ அணியின் ரோல்ஸ் ராய்ஸ் - இந்திய இளம் வீரரை பாராட்டிய ஜான்டி ரோட்ஸ்
|மோர்கல் பாராட்டும் அளவுக்கு மயங்க் யாதவ் வலைப்பயிற்சியில் அற்புதமாக பந்து வீசியதாக ஜான்டி ரோட்ஸ் கூறியுள்ளார்.
கேப்டவுன்,
இந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் லக்னோ அணிக்காக அறிமுகமான மயங்க் யாதவ் தொடர்ச்சியாக 145 - 155 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
குறிப்பாக முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகன் விருது வென்று அவர் 2வது போட்டியிலும் குறைந்த ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்து ஆட்டநாயகன் விருது வென்றார். அதனால் ஐ.பி.எல். வரலாற்றில் அறிமுகம் ஆன முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த ஆட்டநாயகன் விருது பெற்ற முதல் வீரர் என்ற மிகப்பெரிய சாதனை படைத்த அவர் இந்த சீசனில் வேகமான (157.6 கி.மீ) பந்தை வீசிய பவுலராகவும் சாதனை படைத்தார்.
அதனால் அந்த சமயத்தில் டி20 உலகக்கோப்பையிலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள பார்டர் - கவாஸ்கர் கோப்பையிலும் மயங்க் யாதவ் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் முழுமையாக 5 போட்டிகள் கூட விளையாடாத அவர் காயத்தை சந்தித்தார். அதன் பின் சில போட்டிகள் கழித்து மீண்டும் விளையாட வந்த அவர் முழுமையாக ஒரு ஓவர் வீசி முடிப்பதற்குள் மீண்டும் காயமடைந்து வெளியேறினார்.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவின் ஆலன் டோனால்ட் போல மயங்க் யாதவ் லக்னோ அணியின் ரோல்ஸ் ராய்ஸ் என்று மோர்னே மோர்கல் பாராட்டியதாக ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார். 2023 சீசனில் லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளராக இருந்த மோர்கல் பாராட்டும் அளவுக்கு மயங்க் யாதவ் வலைப்பயிற்சியில் அற்புதமாக பந்து வீசியதாக ஜான்டி ரோட்ஸ் கூறியுள்ளார்.
அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:- "நான் பவுலிங் பயிற்சியாளர் கிடையாது. ஆனால் கடந்த சீசனில் மோர்னே மோர்கல் இருந்தார். மயங்க் யாதவ் செயல்பாடுகளை வலைப்பயிற்சியில் பார்த்து விட்டு மோர்னே மோர்கல் 'வாவ் இந்தப் பையன் பவுலர்களின் ரோல்ஸ் ராய்ஸ்' என்ற வகையில் சொன்னார். ஆலன் டொனால்டை நாங்கள் ரோல்ஸ் ராய்ஸ் என்றழைப்பது போலவே அவரைப் பற்றி மோர்கல் பேசினார்.
அவர் லக்னோவின் ரோல்ஸ் ராய்ஸ். அவர் காயத்தை சந்தித்திருந்தாலும் சீசன் முழுவதும் அணியுடன் இருந்தார். அவரை லக்னோ உரிமையாளர்கள் அணியுடன் வைத்திருக்க முடிவெடுத்தார்கள். அதனால் 2023 ஐபிஎல் தொடரில் விளையாடா விட்டாலும் அவர் முழுவதுமாக காயத்திலிருந்து குணமடைந்தற்காக அணியின் அங்கமாக இருந்தார். ஏனெனில் இந்த பையனிடம் அற்புதமான திறமை இருப்பதாக நாங்கள் நம்பினோம். அவர் விளையாடிய விளையாட்டுகளில் நாங்கள் திறமையை பார்த்தோம். எனவே அவரை எல்லோரும் கண்காணித்தனர்" என்று கூறினார்.