< Back
கிரிக்கெட்
ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் ரிஷப் பண்டின் இடத்தை நிரப்ப தகுதியானவர் இவர் தான் - தினேஷ் கார்த்திக் கருத்து
கிரிக்கெட்

ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் ரிஷப் பண்டின் இடத்தை நிரப்ப தகுதியானவர் இவர் தான் - தினேஷ் கார்த்திக் கருத்து

தினத்தந்தி
|
5 July 2023 3:30 PM IST

ரிஷப் பண்டுக்கு மாற்றாக ஒரு விக்கெட் கீப்பரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி நிர்வாகம் உள்ளது.

சென்னை,

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கினார் ரிஷப் பண்ட். அதன் பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் முதல் கிரிக்கெட்டில் இருந்து விலகி உள்ள ரிஷப் பண்டுக்கு மாற்றாக ஒரு விக்கெட் கீப்பரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி நிர்வாகம் உள்ளது.

குறிப்பாக இந்த ஆண்டு இறுதியில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறயிருக்கும் 50 வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணியில் ரிஷப் பண்ட்டின் இடத்தில் விளையாடப்போகும் வீரர் யார்? என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

எதிர்வரும் ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடர், அயர்லாந்து தொடர் என சில தொடர்கள் மட்டுமே உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக எஞ்சியுள்ளதால் இந்திய அணி விக்கெட் கீப்பரை எவ்வளவு சீக்கிரம் தேர்ந்தெடுக்க வேண்டுமோ அவ்வளவு சீக்கிரம் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் உள்ளது.

இந்நிலையில் ஒருநாள் போட்டிகளில் ரிஷப் பண்டிற்கான இடத்தில் தற்போதைய நிலையில் இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் போட்டிக்கு உள்ளனர். ஆனாலும் இந்த மூவரில் இருந்து யார் உறுதி செய்யப்படுவார்கள்? என்பது இதுவரை தெரியாமலே இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் அனுபவ ஆட்டக்காரரான தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ரிஷப் பண்ட்டின் இடத்திற்கான மாற்று வீரராக கே.எல் ராகுலை தேர்வு செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

இந்த மூவரில் ஒருவரை தேர்வு செய்வது மிகவும் கடினம் தான் இருந்தாலும் கே.எல் ராகுல் தான் ரிஷப் பண்டின் இடத்திற்கு சரியான மாற்றாக இருப்பார்.

ஏனெனில் கே.எல் ராகுல் ஐந்தாவது இடத்தில் இறங்கி சிறப்பாக பேட்டிங் செய்யக்கூடியவர். அதோடு அனுபவ வீரரான அவர் சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரை விட முன்னிலை பெற்றுள்ளார். எப்பொழுதுமே ஐசிசி போன்ற மிகப்பெரிய தொடர்களில் செட்டான வீரர்கள் இருந்தால்தான் அது அணிக்கு நல்லது.

அந்த வகையில் இந்திய அணியில் கடந்த பல ஆண்டுகளாக விளையாடி வரும் கே.எல் ராகுல் சரியான வீரராக இருப்பார். அதேபோன்று அவருக்கு அடுத்து ஒருவேளை கே.எல் ராகுலின் காயமும் குணமடையாமல் போனால் சஞ்சு சாம்சன் சரியாக இருப்பதாக நினைக்கிறேன். ஏனெனில் கடந்த ஆண்டு தனக்கு கிடைத்த வாய்ப்புகளை அற்புதமாக சஞ்சு சாம்சன் பயன்படுத்தியுள்ளார்.

அதுமட்டுமின்றி கடந்த 12 மாதங்களாகவே சர்வதேச போட்டிகளில் அவர் தனது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அவருக்கும் போதுமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டால் நிச்சயம் அவராலும் இந்திய அணியின் வெற்றிக்கு உதவ முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்